என்ன ஒரு ஏற்பாடும் செய்யல… சுதந்திர தின முன்னேற்பாடுகள் செய்யாத ஊராட்சி செயலர் மீது ஆட்சியர் எடுத்த அதிரடி ஆக்ஷன்!!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2022, 3:10 pm
சுதந்திர தின விழாவிற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளாத ஊராட்சி செயலரை கடுமையாக கண்டித்து அதிரடியாக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 75 வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்குச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த நெறிமுறைகள் ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்பட்ட நிலையில் விழாவிற்கான அழைப்பிதழ் தேசியக்கொடி ஏற்ற கொடிக்கம்பம் உள்ளிட்ட எந்த அடிப்படை முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் வடக்குச்சிபாளையம் ஊராட்சி செயலாளர் முருகன் என்பவரை மாவட்ட ஆட்சியர் மோகன் கடுமையாக கண்டித்ததோடு உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை அனைத்து ஊராட்சிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.