இலவசங்களுக்கு NO சொல்லுங்க.. இப்படியே போனால் தமிழக அரசு திவாலாகிடும்.. மக்களின் கைகளில் தான் எல்லாமே ; சரத்குமார்…!!
Author: Babu Lakshmanan2 March 2024, 5:03 pm
மிக்சி, கிரைண்டர் அரசு இலவசமாக வழங்கியதால் கஜானாவே காலியாக உள்ளது என்றும், மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால்தான் கடன் தொல்லையில் இருந்து தமிழகம் மீள முடியும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ரோட்டரி கிளப் சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கலந்து கொண்ட சிறப்புரையாற்றினார்.
பின்பு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது :- திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர அதிமுக மற்றும் பாஜக கட்சி மூத்த நிர்வாகிகள் என்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இரண்டு மூன்று நாட்களில் அது குறித்து முடிவெடுக்கப்படும். எனது கட்சியின் உயர் மட்ட குழு நிர்வாகிகளின் முடிவுகள் குறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி இல்லாத இடத்தில் வளர்ச்சி இல்லை என்றும், வளர்ச்சி உள்ள இடத்தில் வளர்ச்சி உள்ளது என்றும் பேசியிருந்தார். பத்திரிகையாளர்களின் கேள்வி கேட்பதைவிட மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அறிவித்த திட்டங்கள் என்னாச்சு என்று, நாங்குநேரியில் 15 வருடங்களாக தொழில் பூங்கா அமைக்க ஒரு ஜேசிபி இயந்திரம் மட்டும் நின்று கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் மட்டும் அல்ல தென் மாநிலங்கள் கேரளா, ஆந்திரா என போதை கலாச்சாரம் பெருகி உள்ளது. அதை காவல்துறை கண்காணித்து பெரும் புள்ளிகள் இருந்தாலும் தண்டனை வழங்கினால் தான், கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதன் பின்புறத்தில் பெரும்புள்ளிகள் இருந்தாலும் அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் யாருக்கு ஆதரிக்கிறோம், யாரை சார்ந்திருக்கிறோம் என்பதை விரைவில் முடிவெடுத்து தெரிய படுத்துகிறேன். தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணியை அறிவிக்கிறேன். வேட்பாளர்கள் தயார் நிலையில் தான் இருக்கிறார்கள். மக்களின் முன்னேற்றம், தொழில் வளம், வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும், தொழில் வளத்தை அதிக அதிகரிக்க வேண்டும். இதுவே எங்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.
திமுக மூன்று ஆண்டு கால ஆட்சியில் கடன் அதிகரித்துள்ளது. 6 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 8.3 லட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளது. இதை காண அச்சமாக உள்ளது. இதை எப்படி அடைக்கப் போகிறார்கள், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள், தொடர்ந்து இலவசங்களை வழங்கி கொண்டே இருக்கிறார்கள். மக்களே இலவசம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும், கல்விக்கும் மருத்துவத்துக்கும் மட்டும்தான் இலவசம் வழங்க வேண்டும்.
மிக்சி, கார், பைக், கிரைண்டர் போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும். இதனால் கஜானா காலியாக உள்ளது, மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால்தான் கடன் தொல்லையில் இருந்து தமிழகம் மீள முடியும்.
நடிகர் சங்கம் கட்டிடம் பற்றி எனக்கு தெரியாது. ஏனென்றால் அதில் நான் இல்லை, ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டால் நான் செய்ய தயாராக இருக்கிறேன், எனக் கூறினார்.