நடிகர் எஸ்வி சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை… ரூ.15,000 அபராதம் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Author: Udayachandran RadhaKrishnan19 February 2024, 4:29 pm
நடிகர் எஸ்வி சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை… ரூ.15,000 அபராதம் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த 2018ஆம் ஆண்டு முன்னாள் பாஜக நிர்வாகியாகவும், நடிகராகவும் உள்ள எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு பரப்பும் வகையில், சர்ச்சைக்குரிய பதிவை கூறியிருந்தார்.
இதனை எதிர்த்து, பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரானது அரசியல் பிரமுகர்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை முன்னதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தனர். நீதிபதி ஜெயவேல் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த சூழலில் இன்று இந்த வழக்கு மீதான தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதில் எஸ்.வி,சேகர் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 1 மாதம் காலம் சிறை தண்டனை விதிப்பதாகவும், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எதுவாக தீர்ப்பை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.