ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல ஸ்டாலின்.. இனிமேல் தான் தமிழ்நாட்டுக்கு இருக்கு ; நடிகர் தம்பி ராமையா பேட்டி..!!
Author: Babu Lakshmanan15 April 2023, 8:25 am
கோவை ; ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல ஸ்டாலின் எனவும், ஞான நிலை எட்டிய வயதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார், அந்த ஞானத்தின் விளைவாக தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும் என நடிகர் தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.
கோவை வ உ சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘எங்கள் முதல்வர்… எங்கள் பெருமை’ என்ற தமிழக முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிட்ட நடிகர் தம்பி ராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது ;- வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை வரலாறை புத்தகங்களில் படித்திருக்கிறோம். பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம். காட்சிகளாக பார்த்திருக்கிறோம். ஆனால் வாழும் தலைவர் ஒருவருடைய வரலாறை கண்முன்னால் பார்ப்பது என்பது மிகப்பெரிய கொடுப்பனை. இந்த ஏழு நாட்களும் முண்டியடித்து கொண்டு இந்த காட்சியை பார்த்து சென்றவர்களெல்லாம், ஒரு சுகமான காட்சியை பார்த்ததாகத்தான் சொல்வார்கள்.
அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது மிகப்பெரிய கட்டாயம். ஒரு இரவில் இருந்து விட்டு மறு இரவில் காணாமல் போவது வெற்றி அல்ல. ஒரு இடத்தில் அழுத்தம் திருத்தமாக வந்து அமர்வதற்கு மிகப்பெரிய தியாகம் இருக்க வேண்டும். கண்ணீர் விட்டிருக்க வேண்டும். துன்பங்களை அனுபவித்து இருக்க வேண்டும். குடும்பத்தை நேசிக்கின்ற ஒரு பண்பு இருக்க வேண்டும். இந்த கண்காட்சியை பார்க்கும்போது, தமிழ்நாட்டின் உடைய முதல்வர் ஸ்டாலின் ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல.
இந்த கண்காட்சியின் நிறைவு பகுதி வரும்போது எனக்கே நிகழ்வு ஏற்படுகிறது. 1976 இல் நெருக்கடியான காலகட்டத்தில் நிறைய தலைவர்கள் எழுதிக் கொடுத்துவிட்டு விலகிச் சென்று விட்டனர். அவ்வாறு விலை கொடுத்து விட்டு விலகி சென்று இருக்கலாம். ஆனால் எழுதி கொடுத்து மறுத்ததன் விளைவு சிட்டிபாபு என்பவரது உயிர் போகிறது. அங்குதான் ஸ்டாலின் என்ற மகத்தான தலைவன் உருவாகிறான்.
அவ்வளவு சுலபத்தில் ஸ்டாலின் அந்த இடத்தில் அமரவில்லை. முத்தமிழறிஞர் கலைஞரை கைது செய்ய போது அதிமுகவினரும் அழுதார்கள். அதேபோன்று கலைஞருக்கு இடம் கிடைத்து விட்டது என்றபோது தமிழகமே வந்தது. சிறு படம் தயாரிப்பவர்கள் இருப்பதற்கு 7 லட்சம் ரூபாய் மானியம் என்பது காதில் தேன் வந்து பாய்வதை போன்றது . ஞான நிலை எட்டிய வயதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். அந்த ஞானத்தின் விளைவாக தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும், என அவர் தெரிவித்தார்.