அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் அண்ணாவையும் சேர்த்து படிங்க : விஜய் பேச்சு குறித்து பிரபல இயக்குநர் கருத்து!!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2023, 12:21 pm
நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை நேற்று சென்னை, நீலாங்கரையில் நடைபெற்ற ‘தளபதிவிஜய்கல்விவிருது’ விழாவில் வழங்கினார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளை சந்தித்து, என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகளே, இங்கு இருக்கும் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என தனது உரையைத் தொடங்கினார் நடிகர் விஜய். நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துப்பாங்க, படிப்பை மட்டும் எடுத்துக்கவே மாட்டாங்க எனும் தனுஷ் நடித்த அசுரன் திரைப்பட வசனத்தை குறிப்பிட்டு பேசினார்.
இதனையடுத்து, மாணவர்கள் கல்வியை தாண்டி மற்ற தலைவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். காமராஜரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பெரியாரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். தற்பொழுது நடிகர் விஜய் பேசியது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு சினிமாவில் நாம் கூறுகிற விஷயம் சமூகத்தில் மிகவும் மதிப்புமிக்க ஒருவரை சென்றடையும் பொழுது அதன் நேர்மறையான தாக்கத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கிறேன். மேலும், நாம் அனைவரும் வரலாறையே தெரிந்திருக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் உடன் சேர்ந்து அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் கூறினார்.