தவறைச் சுட்டிக்காட்டியதால் கொலை முயற்சியா? ஏடிஜிபி புகார்.. இபிஎஸ் கடும் கண்டனம்!

Author: Hariharasudhan
3 February 2025, 12:27 pm

தன்னைக் கொலை செய்வதற்கான சதியே, 2024ல் TNUSRB அலுவலகத்தின் தனது அறையில் ஏற்பட்ட தீ விபத்து என ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய (TNUSRB) தலைமை அலுவலகத்தின் ஏடிஜிபி அறையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட தீ விபத்து, ஏசி மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

ஆனால், இந்த தீ விபத்து தன்னைக் கொலை செய்வதற்காக நடைபெற்ற சதி என டிஜிபி, உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு தலைமைச் செயலாளருக்கு ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக, காவல்துறையில் ஆட்சேர்ப்பின் போது நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், தன் மீது கொலை முயற்சி நடந்ததாக கல்பனா நாயக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி, சென்னை அலுவலகத்தில் உள்ள தனது அறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தலில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் உள்ள முரண்பாடுகளைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

ADGP Kalpana Naik complaint EPS Condemns

அதேநேரம், இந்த முறைகேடுகள் குறித்த தனது அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் பாதகமான தீர்ப்பைத் தடுக்க உதவியது என்றும், மாநில அரசுக்கு அவமானத்தைத் தவிர்த்தது என்றும் குறிப்பிட்டு உள்ளார். இருப்பினும், இந்தப் பிரச்னைகளை வெளிப்படுத்தியதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், அரசாங்கச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் கல்பனா நாயக் கூறியுள்ளார்.

முக்கியமாக, “2024, ஜூலை 29 அன்று, சென்னை எழும்பூரில் உள்ள TNUSRB தலைமை அலுவககத்தை அடைய சில நிமிடங்களுக்கு முன்புதான், அவரது அறையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று காவல்துறை அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தாகவும். பின்னர் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது, அலுவலகம் தீயால் சேதமடைந்துவிட்டது.

என் எரிந்த நாற்காலியைக் கண்டதும் மிகுந்த அதிர்ச்சியையும், திகைப்பையும் சந்தித்தேன். நான் சற்று முன்னதாக வந்திருந்தால், என் உயிரையே இழந்திருப்பேன் என்பது தெளிவாகத் தெரிந்தது” என்று புகார் மனுவில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐபிஎஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

“சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்” என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது. தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது ,
இந்த செயலுக்கு திரு. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் இந்துக்களுக்கு சொந்தம்.. தர்காவை வேறு இடத்துக்கு மாத்துங்க : ஹெச் ராஜா பரபர!

இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, மு.க.ஸ்டாலின், தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும். உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “திமுக அரசில், விதிமுறைகள் மற்றும் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. மாநிலத்தில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக சமுக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல் உயரதிகாரிகள் கூட மாநிலத்தில் பாதுகாப்பாக உணரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Ajith wishes on Phone to Vijay விஜய்க்கு வாழ்த்து கூறிய அஜித்? என்ன வார்த்தை சொல்லிருக்காருனு பாருங்க..!!
  • Leave a Reply