பாஜகவுடன் கூட்டணியா? எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 5:14 pm

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி போட முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

ஸ்டாலின் திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல்லில் சீனிவாசன் கலந்து கொண்டார்.

மனித சங்கிலி போராட்டம் பெரியார் சிலையிலிருந்து மணிக்கூண்டு வரையும், இதை போல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய தாலுகாவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதன் பின்பு, முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,

“திண்டுக்கல்லில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு திண்டுக்கல் சாட்சி. காட்சி மாறுவதற்கு ஆட்சி மாறவேண்டும்

அண்ணா தொடங்கிய கட்சியை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்பொழுது ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்பட்டார். அதேபோல் ஸ்டாலின் தனது மகனை துணை முதல்வராக ஆக்கியுள்ளார் அதன்பின்பு இன்ப நிதி துணை முதலமைச்சராக ஆக்கப்படுவார் என நினைக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பதை ஆளுங்கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.

கொடுங்கோள் ஆட்சி நடைபெறுகிறது. தேவையில்லாத ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது.

விஜய் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்கிறோம். மாநாட்டைத் தொடர்ந்து அவர் என்ன செய்ய உள்ளார் என்பதை இனி தான் பார்க்க வேண்டும். தற்போது எந்த விமர்சனமும் விஜய்க்கு எதிராக கிடையாது.

26 தேர்தலை சந்திக்க பதினாறு அமாவாசை இருக்கிறது. 10 அமாவாசை முடிந்தவுடன் திமுக கூட்டணியில் உள்ள அனைவரும் எடப்பாடியுடன் சேர்ந்து கொள்வார்கள். மக்களும் அதிமுகவிற்கு ஓட்டு போடுவதற்கு தயாராக உள்ளனர்.

அனைத்து கட்சியும் கூட்டணியுடன் தான் போட்டியிடுகிறது. கட்சிகள் அனைத்தும் கூட்டணி இல்லாமல் இருக்க முடியாது. கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க நாங்கள் தயார் ஆனால் கூட்டணி அமையும் பட்சத்தில் அதனை உதாசீனப்படுத்த முடியாது. கூட்டணி வந்தால் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயக கடமை. அனைவரும் சேர்ந்தால் தான் ஓசை எழுப்ப முடியும்.

பாஜக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, ஜோசியம் சொல்ல முடியாது, சூழ்நிலையை பொறுத்துதான், தேர்தல் வரும்பொழுது அது குறித்து தெரியவரும். அரசியலில் நிரந்தர எதிரி இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இப்பொழுது பா.ஜ.க-விற்கு நாங்கள் எதிரி. 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என தெரிவித்தார்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…