அதிமுகவுடனான கூட்டணி முறிவு… பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய கொண்டாடிய பாஜகவினர்…!!!
Author: Babu Lakshmanan19 September 2023, 4:53 pm
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொள்ளாச்சியில் பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகளிடையே கருத்து மோதல் இருந்து கொண்டே வந்தது. இந்த நிலையில், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிமுக தலைமையை கோபம் அடையச் செய்தது.

இதனையடுத்து, அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தொடர்ந்து அண்ணாமலையின் பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பொள்ளாச்சியில் நகர பாஜக சார்பில் நகர தலைவர் பரமகுரு தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட பாஜகவினர், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அறிவிப்பை கொண்டாடினர். இதன் ஒருபகுதியாக, பட்டாசுகளை வெடிக்க முயன்றனர். அப்போது, போலீசார் அனுமதி மறுத்ததால், பாஜகவினர் ஜெயக்குமாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.