அதிமுக வேட்பாளரை கடத்திய மர்ம கும்பல்.. திமுகவினரின் சதித் திட்டம் என கடத்தப்பட்ட கவுன்சிலர் புகார் ; கரூரில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!
Author: Babu Lakshmanan20 December 2022, 9:05 am
கரூர் ; பழிவாங்கும் நடவடிக்கையில் திமுகவை சேர்ந்தவர்களின் உத்தரவின் பேரில் 7 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக கரூரில் கடத்தபட்டு மீட்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர் திருவிக தெரிவித்தார் .
கரூரில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான தேர்தல் நேற்று மதியம் நடைபெற்றது. குறிப்பாக அதிமுக 6 கவுன்சிலர்கள், திமுக 6 கவுன்சிலர்கள் என மொத்தம் 12 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ள நிலையில், மாவட்டஊராட்சி குழு தலைவராக அதிமுகவை சேர்ந்தவர் இருந்து வருகிறார்.
மேலும், துணை தலைவருக்கான தேர்தலானது சுமார் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் நேற்று மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் கரூரில் காலையில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் காரை தாக்கி காரில் இருந்த அதிமுக மாவட்ட கவுன்சிலரும், துணை தலைவர் வேட்பாளருமான திரு.வி.க என்பவரை சுமார் 5 கார்களில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றது. கடத்தி செல்லப்பட்ட திரு.வி.க தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட அதிமுக மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திமுகவை சேர்ந்தவர்களின் உத்தரவின் பேரில் மதுரையை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தி வைத்து, இரும்பு ராடால் தாக்கியது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக தன்னை தொந்தரவு செய்தனர். மேலும், இந்த துணை தலைவர் தேர்தலில் பங்கேற்ககூடாது என்று தன்னை கடத்தியவர்கள் மிரட்டினர்.
மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அராஜகமான முறையில் இந்த தேர்தல் நடந்து உள்ளது. இது உண்மையான தேர்தல் இல்லை. பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த தேர்தல் நடைபெற்று உள்ளது. அவர்கள் தாக்கியதால் உடல் நிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறேன், என அவர் தெரிவித்தார்.