மேயர் விடுதி பராமரிப்புக்கு ரூ.1 கோடியா..? கோவை மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா..!!
Author: Babu Lakshmanan30 June 2022, 1:20 pm
கோவை : மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதில், கோவை மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற திமுக, மேயர் பதவியையும் தனதாக்கியது. கோவை மாநகராட்சி மேயராக கல்பனா தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், மேயர் விடுதி பராமரிப்புக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ள கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் மாமன்ற கூட்டம் நடைபெறும் வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தரையில் அமர்ந்து, பதாகைகளை பிடித்தவாறு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, கவுன்சிலர் பிரபாகரன் கூறியதாவது :- மேயர் இல்லம் புதுப்பிக்க 1 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும். சேர்மன் அலுவலகம் பணிக்கு 1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்படி மக்கள் வரி பணத்தை விரயமாக செலவு செய்கின்றனர்.
மேலும், திமுக அரசு, இதுவரை கோவைக்கு மத்திய அரசு ஒதுக்கப்பட்ட நிதியில் மட்டுமே திட்டங்களை தொடங்கி வருகிறது. கோவை மாநகராட்சி வருவாயிலிருந்து மேம்பாட்டுக்கு நிதிகளை ஒதுக்குவதோ, செலவுகளை செய்வதோ இல்லை, என்று குற்றம்சாட்டினார்.