முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன் கோவை அதிமுக கவுன்சிலர்கள் சந்திப்பு : தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து பெற்றனர்
Author: Babu Lakshmanan23 February 2022, 3:48 pm
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன் கோவையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கோவை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. அதில், கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
அதிமுக சார்பில் 38 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை இணைச்செயலாளர் ஷர்மிளா சந்திரசேகர் முதல் வெற்றியை அதிமுகவிற்கு பெற்று தந்தார். இதேபோல 47 வது வார்டில் பிரபாகரனும், 90 வது வார்டில் ரமேஷ் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் கொலுசு, ஹாட் பாக்ஸ் போன்ற பொருட்களை வழங்கியும், வாக்கு எண்ணிக்கையின் போது அதிகாரத்தை துஷ்பிரோயம் செய்தும் இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று இருப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் பணபலம், ஆள்பலம், அதிகார பலம் உள்ளிட்டவற்றையும் மீறி, பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்று கோவை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி. ஷர்மிளா சந்திரசேகர், திரு. ஆர். பிரபாகரன், திரு. டி.ரமேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்,” எனக் கூறினார்.