அதிமுக முன்னாள் கவுன்சிலர் லாரி ஏற்றி கொலை முயற்சி ; திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆதரவாளர்கள் வெறிச்செயல்….!

Author: Babu Lakshmanan
10 April 2024, 4:54 pm

மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய அதிமுக கவுன்சிலரை திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆதரவாளர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் செங்குறிச்சி திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரியில் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால் அந்த ஏரியில் பள்ளம் ஏற்பட்டு, அங்கு குளிக்கச் செல்லும் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அசம்பாவீதங்கள் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க: 1,359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை… கொல்லங்கோடு அம்மன் கோவிலில் குவிந்த தமிழக, கேரள பக்தர்கள்..!!!

எனவே, ஏரியில் மணல் அள்ளக்கூடாது என அந்த கிராம மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதனை பொருட்படுத்தாமல் அண்ணாமலை தொடர்ந்து மணல் எடுத்து வருகிறார். நேற்று ஏரியிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை, அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவர் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார்.

அப்போது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் லாரியை ஏற்றி அவரை கொலை செய்ய முயன்றதாக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ஜெயக்குமார் காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஜெயக்குமார் உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் முன்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் கடத்தலைத் தடுக்க சென்ற முன்னாள் அதிமுக கவுன்சிலர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!