இபிஎஸின் அறிக்கையை படிச்சிருந்தாலே போதும்… பட்டாசு தொழில் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் ; ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan18 October 2023, 10:51 am
பட்டாசு விபத்து குறித்து எடப்பாடியார் கொண்டு வந்த சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மெத்தனபோக்கு காட்டுவதால் பட்டாசு ஆலையில் தொடர் விபத்து நடைபெறுவதாக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பிஉதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- 7 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையிலே பட்டாசு தயாரிக்கும் இடங்களில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு பலரும் உயிரிழக்கும் சம்பவங்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்து, அதில் ஆதாரத்தோடு எடுத்து வைத்து இனியும், இந்த துயரம் தொடரக்கூடாது, அதற்கு அரசு முழு கவனம் செலுத்த வேண்டும், உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்கள்.
ஆனாலும் மெத்தன போக்கிலே இந்த அரசு செயல்படுகிறது. எடப்பாடியார் மக்கள் மீது அக்கறையோடு சட்டசபையில் எடுத்து வைக்கிறார் என்று சொன்னால், அதை கவனத்தோடு உள்வாங்கி இந்த அரசு செயல்பட்டு இருந்தால், இன்றைக்கு சிவகாசி அருகே பட்டாசு கடையில் விபத்தில் 12 பெண்கள் உட்பட 14 பேர்கள் உயிரிழப்பு விபத்து சம்பவங்கள் ஏற்பட்டிருக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
காவிரி பிரச்சனையில் எடப்பாடியார் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தார். நீர் பற்றாக்குறை உள்ளது 100 அடி இருக்கும்போதே தண்ணீர் திறந்தால் கடைமடை பகுதிவரை எப்படி நீர் செல்லும் என்று மூன்று மாதங்களுக்கு முன்பாக அறிக்கை வெயிட்டார். இந்த அறிக்கையை முதலமைச்சர் ஒழுங்காக படித்து இருந்தாலே இன்றைக்கு காவிரி டெல்டா பகுதியில் இந்த வறட்சி ஏற்பட்டிருக்காது. எதையும் அக்கறை இல்லாத தான்தோன்றித்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் 1,482 பட்டாசு ஆலைகள் உள்ளன. அவற்றிலே விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1085 பட்டாசு ஆலைகள் உள்ளது. சில்லறை விற்பனை கடைகள் 6,539 உள்ளன. இந்த பட்டாசு தொழில் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களுடைய நலனை காப்பதற்காகத்தான் எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கிறபோது, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உரிய பாதுகாப்புகளை வழங்கிட நல வாரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
தமிழக கர்நாடகா எல்லையிலே ஓசூர் அருகே அத்திப்பள்ளி பட்டாசு கடையில் 7ம் தேதி ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அரியலூர் மாவட்டம் அருகே நாட்டு வெடிகுண்டி தயாரிப்பில் 12 பேர் பலியானார்கள். தற்போது, சிவகாசியில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது வேதனையின் வேதனையாக இருக்கிறது.
தொழிலாளர்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேலை செய்வதால் எந்தவித பணி பாதுகாப்பும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை. சில இடங்களில் உரிமம் காலாவதி ஆன பின்னரும், தொடர்ந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது.குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிக தொழிலாளர்கள் ஈடுபடுத்துவது, பாதுகாப்பு உபகரணங்களை இல்லாத உள்ளிட்ட பல்வேறு கரணங்களால் விபத்து ஏற்படுகிறது. இது போன்ற விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, அப்பாவி உயிர்கள் பலியாவதை அரசு தடுத்த நிறுத்த முன்வர வேண்டும்.
முதலமைச்சர் உளவுத்துறை அறிக்கையை படிக்கவில்லை என்றாலும் கூட, எடப்பாடியார் கொடுத்த அறிக்கையை படித்தால் சிறந்த நிர்வாகத்தை முதலமைச்சர் தர முடியும். ஆனால் சர்வாதிகார போக்கில் தான் எல்லாம் எமக்குத் தெரியும் என்கின்ற பாணியிலே அவர் செயல்படுகிறார். அதனுடைய விளைவுதான் இன்றைக்கு காவிரியிலே நாம் உரிமை பறிகொடுத்து விட்டு அந்த விவசாயிகள் கண்ணீருடன் உள்ளார்கள்.
ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள் என்பதை போல ஒரு அரசும், எதிர்க்கட்சியும் இரண்டு பக்கங்களாக இருந்தால் சீராக கொண்டு நல்லாட்சி தரமுடியம். ஆளுங்கட்சி ஒரு தண்டவாளம் எதிர்க்கட்சி மற்றொரு தண்டவாளம் என்று இரண்டு தண்டவாளங்களும் சரியாக இருந்தால் தான் நல்லாட்சியை அரசு செலுத்த முடியும்.
அந்த அடிப்படை தத்துவத்தைக் கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை, என கூறினார்.