முன்விரோதம் காரணமாக அதிமுக ஊராட்சி தலைவர் படுகொலை : பிரபல ரவுடியின் உறவினர் உள்பட 12 பேர் சிறையில் அடைப்பு

Author: Babu Lakshmanan
18 May 2022, 10:43 pm

திருவள்ளூர் : தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் பிரமுகரான மனோகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி தனசேகர் உறவினர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து மீஞ்சூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கொண்டகரை கிராமத்தில் குருவிமேடு என்ற இடத்தில் விழாவிற்கு சென்று விட்டு மனைவி சர்மிளா மற்றும் குழந்தைகளுடன் காரில் வீடு திரும்பிய போது, டிப்பர் லாரியில் மோதி விபத்தை ஏற்படுத்தி, அதில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட கும்பல் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை சரமாரியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டி சாய்த்தது.

படுகாயங்களுடன் அவரை திருவொற்றியூர் ஆகாஷ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து, உடற்கூறு ஆய்விற்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மீஞ்சூர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டபோது, பத்துக்கும் மேற்பட்ட கும்பல் கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

இதனை அடுத்து ஆவடி ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் தலைமையில் செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முருகேசன் எண்ணூர் காவல் உதவி ஆணையர் பிரம்மாண்டம் ஆகியோர் கொண்ட இரண்டு தனிப்படைகள் கொலையாளிகளை தேடி வந்த நிலையில், இக்கொலையில் ஈடுபட்டதாக வெள்ளி வாயல் சாவடியை சேர்ந்த சுந்தர் என்ற சுந்தரபாண்டியன், (43) லாரியின் ஓட்டுநர் பத்மநாபன் அவரது உறவினர் அரவிந்த் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தொழில் ரீதியாக வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் உள்ள சாம்பல் கழிவுகளை குருவிமேடு பகுதியில் கையாளுவதில் மனோகரனுடன் ஏற்பட்ட முன்விரோதத்தில், கூலி படையினருடன் இணைந்து நாகராஜ் என்ற பாம்பு நாகராஜ், ராஜ்குமார் என்ற பாட்டில் ராஜ், யுவராஜ் என்ற கில்லி யுவராஜ், ராஜேஷ் என்ற ஆகாஷ், பாலா என்ற யுவராஜ், மது கோபாலகிருஷ்ணன், சூர்யா, பாலாஜி, அரவிந்தகுமார் உள்ளிட்ட 12 பேரையும் சுந்தரபாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய லாரி, 7 கத்தி, செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, விசாரணைக்குப் பின்னர் மீஞ்சூர் போலீசார் நீதித்துறை நடுவர் எண் 1 ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மனைவி, குழந்தைகள் கண் முன்பாக கொடூரமாக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான சுந்தரபாண்டியன், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனின் உறவினர் என்பதும், இவர் இப்பகுதியில் லாரி தொழில் நடத்தி வந்ததும், கட்டுமான பொருட்களை விற்பனை செய்தும் வந்துள்ளார்.

குருவிமேடு பகுதியில் வல்லூர் தேசிய அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளை ஒப்பந்த அடிப்படையில் கையாளுவதில் மனோகரன் மற்றும் சுந்தரபாண்டியன் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், முன்விரோதம் மற்றும் தொழில் போட்டியால் மனோகரனை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியன் வெள்ளிவாயல் சாவடி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 782

    0

    0