வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை.. பிரதமர் மோடி கொஞ்சம் அடக்கி வைக்கனும் ; கேபி முனுசாமி காட்டம்…!

Author: Babu Lakshmanan
27 January 2024, 7:52 pm

அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்றும், பிரதமர் மோடி அண்ணாமலை பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி புற நகர் பேருந்து பணிமனையில் அண்ணா தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி முனுசாமி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே. பி முனுசாமி கூறியதாவது :- அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கி விட்டோம். அதிமுக தலைமையிலான கூட்டணி அமைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த பின், அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவலை வழங்குவோம்.

பாஜக தமிழகத்தில் 39 இடங்களில் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்த நிலையில், மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிந்த பின் மக்கள் வெளிப்படுத்துவார்கள். அதன் பின் அண்ணாமலை அதை உணர்வார். அவர் என் மண் என் மக்கள் என்பதை விட்டுவிட்டு சென்னை கமலாலயத்தில் அமர்ந்துகொண்டு பேசுவது போல, அவர் செல்லும் இடங்களில் பேசி வருகிறார்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் போது அவர் படிக்கின்ற மாணவராக இருந்து இருப்பார். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர், வரலாற்றை பிழையோடு கூறக்கூடாது. 1998 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி வட மாநிலத்தில் தான் இருந்தது. தமிழகத்தில் பாஜக கிடையாது. ஜெயலலிாதா தான் பாஜகவை தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார்.

அப்போதைய பாஜக தலைவர் வாஜ்பாய் மற்றும் அத்வானி இருவரையும் சென்னை மெரினாவுக்கு அழைத்து வந்து தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை ஜெயலலிதா தலைமையேற்று நடத்தினர். வடமாநிலத்தில் மட்டும் இருந்த பாஜகவை தென்மாநிலத்திற்கு கொண்டு வந்த ஜெயலலதா, தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழருக்கான உரிமையை தர மறுத்ததால் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அந்த கட்டிடமும், அந்த அமைப்பும் நாங்கள் உருவாக்கி கொடுத்தது என்பதை அண்ணாமலைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் மீது நான் வன்மமாக இருக்கிறேன் என தெரிவிக்கிறார். ஆனால் அண்ணாமலை தன்னை முன்னிலை படுத்தி பாஜகவை பின்னிலை படுத்தி பேசி வருகிறார். அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியாமல், தலைசிறந்த தலைவர் நரேந்திர மோடி என கூறி அவரது நற்பெயரை சம்பாதிக்க முயற்சி செய்கிறார்.

வாஜ்பாய் அவர்கள் தலைமையில் பாஜக இருக்கும் போது, மோடி ஒரு தொண்டராகவோ அல்லது ஒரு மாநில தலைவராகவோ இருந்து இருப்பார். வாஜ்பாய் அவர்களை வாழ்த்தி தற்போது மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால் அண்ணாமலை வாஜ்பாய் பற்றி பேசுவது இல்லை. வாஜ்பாய் மருக்கடிக்கப்படுகிறாரா..? அல்லது மறந்து விடுகிறார்களா..? அண்ணாமலை அவர் கட்சினுடைய தலைவர்களை கலங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் இதை அறிந்து அவருடைய பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ஒரு எம்எல்ஏவின் மகனும், மருமகளும் மோசமான செயலில் ஈடுபட்டார்கள். அதற்கு அடுத்ததாக பத்திரிகையாளர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு யாரோ ஒரு சக்தி அதை தடுத்துள்ளது. மற்றவர்களுக்காக ஆட்சி செய்வதால் தான் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது அமைதி இல்லாத தமிழகமாக உள்ளது. இதை கண்டித்து தான் அதிமுக பிப்ரவரி 1ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

ராமர் கோவிலை பொருத்தவரை ராமர் அனைவருக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை யாராவது ஏமாற்றினால் அந்த தெய்வம் சும்மா இருக்காது பின்பு அதற்குரிய தண்டனையை அந்த ராமபிரான் வழங்குவார், என பேசினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ