தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்… சசிகலாவை காத்திருந்து சந்தித்து அதர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளார் ; ராஜன் செல்லப்பா விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan6 February 2024, 12:40 pm
தர்மயுத்தம் என்று மெரினாவில் யாருக்காக ஆரம்பித்தாரோ. அதே மரியாதைக்குரியவரையே காத்திருந்து சந்தித்து அதர்ம யுத்தம் துவங்கியுள்ளார் என்று திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள சுல்தான் சிக்கந்தர் அவுலியா பள்ளிவாசலில் அதிமுக சார்பில் புனரமைப்பு நிதி வழங்கப்பட்டது. பள்ளிவாசல் மையவாடி சீரமைப்புக்காக அதிமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வக்கீல் ரமேஷ் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் பகுதி செயலாளர் மோகன் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இஸ்லாமிய சகோதரர்கள் அதிமுகவிற்கு ஏற்கனவே ஆதரவு அளித்து வருகின்றனர். சிறுபான்மை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த அதிமுக அரசு, அதனை எடுத்துக்காட்டி அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள். சிறுபான்மையினரின் நலனில் அதிமுக தொடர்ந்து ஆதரவு அளிக்கும், எனக் கூறினார்.
சென்னையில் ஓபிஎஸ் சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு, மெரினா கடற்கரையிலே மதிப்பிற்குரியவரை காத்திருந்து சந்தித்துள்ளார். யாரை எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கினாரோ, இன்னைக்கு அவரையே அதே மெரினா கடற்கரையில் சந்திப்பு வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த சந்திப்பினால் ஒரு பயனும் ஏற்படாது. ஓபிஎஸ்-ஸால் தான் கழகம் பிளவுபடும் சூழ்நிலை உருவானது. அதுவே காரணமாக இருந்திருக்கிறது. ஆகவே, இந்த சந்திப்பு சிறந்த சந்திப்பு அல்ல, நல்ல சந்திப்பு அல்ல.
கட்சி இன்றைக்கு அண்ணன் எடப்பாடியாருடைய நல்ல நோக்கத்திலே மிகச் சிறப்பாக கட்டி காத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அண்ணா திமுகவை எதுவும் பாதிக்காது. ஓபிஎஸ் அண்ணா திமுக கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டு விட்டவர். அவராக ஒதுங்கிக் கொண்டவர். அப்படிப்பட்டவரை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இரட்டை இலையை முடக்க நினைத்தவர், திமுகவோடு தொடர்பு வைத்திருக்கிறவர். இன்றைக்கு பாஜகவோடு ஊறி திளைத்துக் கொண்டிருக்கிறார்.
அண்ணா திமுகவை எடப்பாடியார் இரட்டை இலையை நீதிமன்றத்தில் காப்பாற்றியவர். தலைமைக் கழகத்தை காப்பாற்றியவர். தலைமைக் கழகத்தை எட்டி உதைத்தவர்கள். அவர்களோடு எந்த வகையில் இணைவதற்கான சூழல் இல்லை. கண்டிப்பாக தனித்துவம் வந்தது எடப்பாடி அவருடைய தலைமையில் இருக்கக்கூடியது. அது மிகச் சிறப்பாக மக்கள் மத்தியில் ஆதரவோடு இருக்கக்கூடிய ஆதரவு கொடுப்பதால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை, எனக் கூறினார்.
வரும் தேர்தலில் மூன்றாவது அணைய அமையுமா என்ற கேள்விக்கு, “மூன்றாவது அணி அமையுமா என்பது தெரியவில்லை தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா திமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி வந்தது உண்டு. அனைத்திந்திய அண்ணா திமுக கடந்து முறை வெற்றி வாய்ப்பை இழந்தது. தற்போது திமுகவிற்கு எதிரான சூழ்நிலையில் மக்கள் இருப்பதால், அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பார்கள். மக்களாகவே அதிமுகவை ஆதரித்து வெற்றி பெற செய்வார்கள், என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார்.