திமுக எம்பி ஆ.ராசா மதுரை பக்கம் நடமாட முடியாது.. இது மாற்றான் தோட்டத்து மல்லிகை அல்ல சாக்கடை ; ராஜன் செல்லப்பா ஆவேசம்
Author: Babu Lakshmanan1 February 2024, 2:36 pm
திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் எம்ஜிஆர் குறித்த விமர்சனத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
பட்டியலின பெண் மீது தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியது மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான தி.மு.க அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை கருப்பாயூரணியில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கு பெற்றனர். திமுக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அதை தொடர்ந்து, அங்கே இருந்த தற்காலிக மேடையில் பேசிய எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது :- நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெப்பக்குளத்தில் மின் விளக்குகள் அமைத்து கொடுத்தற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டியதாக சு.வெங்கடேசன் குறிப்பிட்டு உள்ளார். 5 ஆண்டுகளில் மின் விளக்கை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என செல்லூர் ராஜூ சூசகமாக குறிப்பிட்டதை எம்.பி பொதுவெளியில் பாராட்டியதாக குறிப்பிட்டு உள்ளார்.
ஜெயலலிதா காலத்தில் இருந்து எதிர்க்கட்சிகளோடு அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. செல்லூர் ராஜு வெள்ளந்தி மனதுடன் பாராட்டியதை சு.வெங்கடேசன் மனதுக்குள் வைத்திருக்க வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என நினைத்து செல்லூர் ராஜு பேசியுள்ளார். ஆனால் மாற்றான் தோட்டத்து மல்லிகை அல்ல சாக்கடை என மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்.
மதுரை மக்களுக்கு சு.வெங்கடேசன் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. மக்கள் நல போராட்டங்களிலும் பங்கேற்கவில்லை, தமிழை சொல்லி சு.வெங்கடேசன் வியாபாரம் செய்து வருகிறார். திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எம்ஜிஆர் விமர்சனம் செய்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆ.ராசா மதுரை பக்கம் வந்தால் நடமாட விட மாட்டோம். எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல மெகா கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம், என கூறினார்.