முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி… அம்மாவிடம் இருந்து துணிச்சல் திமுகவில் இல்லை ; அமைச்சர் மீது தளவாய் சுந்தரம் பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
15 December 2023, 3:53 pm
Quick Share

ரிசர்வ் வங்கியின் விவசாயக் கடனுதவி – கறவை மாட்டுக் கடனுதவி மற்றும் வட்டி விகிதம் போன்றவற்றிற்கான சட்ட திட்டங்களை பால்வளத்துறை அமைச்சர் அறிவாரா? உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டு தவறான தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளதால் ஆவினுக்கு பால் கொடுங்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மைக்கு மாறான பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களுக்கு 14 முதல் 15 சதவீத வட்டியில் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது 9 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளுக்கு என்ன வட்டி வாங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது ரிசர்வ் வங்கியாகும். அதற்கான சுற்றறிக்கையினை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது. இதனை பால்வளத்துறை அமைச்சர் தெரிந்திருக்க வேண்டும். இதனை அறியாமல் உண்மைக்கு மாறான தகவல்களை அமைச்சர் தெரிவிக்கக் கூடாது.

விவசாயக் கடன் மற்றும் அவை சார்ந்த கடனுதவிகள், கறவை மாடுகள் வாங்க கடனுதவி போன்றவற்றிற்கான வட்டியை நிர்ணயம் செய்வது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆகும். ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வட்டி விகிதத்தில் தான் அனைத்து கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன. இதனை தெரியாமல் முன்பு 14 முதல் 15 சதவீத வட்டியில் கறவை மாடுகள் வாங்க கடனுதவிகள் வழங்கப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்துள்ளார். 14 சதவீதம் 15 சதவீதம் என்பது கந்து வட்டி காரர்களின் செயலாகும்.

ரிசர்வ் வங்கி அனுமதியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற கூட்டுறவு வங்கிகளில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வட்டி விகிதத்தில் தான் கடனுதவிகளை வழங்கி வருகின்றன. பால்வளத்துறை அமைச்சர் சொன்னது சரியல்ல. முன்பு அதிகளவு வட்டி விகிதமான 14 சதவீதம் 15 சதவீதம் வட்டி விகிதத்தில் எந்த வங்கி கறவை மாடுகள் வாங்க எந்த இடத்தில் கடனுதவிகள் வழங்கியது. எத்தனை பேருக்கு வழங்கியது போன்ற விபரங்களை பால்வளத்துறை அமைச்சர் வெளியிடத் தயாரா? இதனை வெளியிட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

தொடக்க வேளாண்மை சங்கங்களில் கறவை மாடுகள் பராமரிப்பு கடன் வட்டியில்லாமல் வழங்கப்படுகிறது என்று மீண்டும் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்துள்ளார். கறவை மாடுகள் வாங்குவதற்கு தான் வங்கிகளால் கடனுதவிகள் வழங்கப்படுகிறதே தவிர, கறவை மாடுகள் பராமரிப்புக்கு எந்த வங்கியும் கடனுதவிகள் வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால் கறவை மாடுகள் பராமரிப்புக்கு எந்த வங்கி எந்த இடத்தில் கடனுதவி வழங்கியது, கறவை மாடுகள் பராமரிப்புக்கு எத்தனை நபர்களுக்கு கடனுதவி வழங்கி உள்ளது என்பதை தெளிவாக தெளிவுபடுத்த வேண்டும்.

சந்தை விலையை ஒப்பிடும் போது குறைந்த விலையில் தரமான மாட்டு தீவனம் வழங்கப்படுகிறது என பால்வளத்துறை அமைச்சர் கூறுகிறார். விடியா தி.மு.க ஆட்சியில் ஆவின் மூலமாக வழங்கப்பட்ட தீவன மானியம் நிறுத்தப்பட்டதால் தான் பால் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு 10 நாட்களுக்குள் பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் பால் உற்பத்தியை பெருக்குவதோடு, கிராம பொருளாதாரம் மேம்பட்டு பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது என்றும் தவறான தகவலை பால்வளத்துறை அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு பணப்பட்டுவாடா மூன்று மாதத்திற்கு மேலாக நிலுவையில் உள்ளது. பால்வளத்துறை அமைச்சர் 10 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்யப்படுவது எனக் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. பால்வளத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிடும் போது, சரியான தகவல்களை, புள்ளி விபரங்களை கேட்டு உண்மை தன்மையோடு வெளியிட வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்றும் வகையில் தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடக்கூடாது.

பால்வளத்துறை அமைச்சர் அறிக்கையினை தெரிந்து வெளியிட்டாரா? தெரியாமல் வெளியிட்டாரா? இதில் இருப்பது அனைத்தும் உண்மைக்கு மாறானவை. மேற்கூறிய அனைத்தையும் விளக்கி அவர் மக்களுக்கு மீண்டும் தெளிவு படுத்த வேண்டும்.

ஆவின் நிறுவனத்தால் தற்போது பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 38 ஆகவும், எருமைபால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 44 ரூபாயிலிருந்து 47 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 2.08 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. அதில் 25 இலட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தபடுகிறது. ஆவின் நிர்வாகம் 12 சதவீத பாலை கொள்முதல் செய்கிறது. தனியார் பால் நிறுவனங்களும், கேன் பால் ஊற்றுபவர்களும் மீதமுள்ளவற்றை வாங்குகின்றனர். 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 இலட்சமாக இருந்த ஆவினின் பால் கொள்முதல் நடப்பாண்டு அக்டோபரில் 28.50 இலட்சம் லிட்டராகவும், டிசம்பரில் 27.50 இலட்சம் லிட்டராகவும் குறைந்துள்ளது.

ஆவினின் பால் கொள்முதல் விலை குறைந்து வருவதால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் உயர்வு கேட்டு போராட்டம் நடத்த தயாராகி வந்தனர். மேலும் அதிவிரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் உயர்வு கேட்டு வருவதால் தேர்தலில் தமக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதை அறிந்து விடியா தி.மு.க அரசு பால் கொள்முதல் விலையை ரூபாய் 3 ஆக தற்போது உயர்த்தி ஆணையிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வரை 1 லிட்டர் பாலுக்கு ரூ. 3 ஊக்கத் தொகை வழங்கும் போது, ஆவின் நிறுவனம் தினமும் கொள்முதல் செய்யும் 27.50 இலட்சம் லிட்டர் பாலுக்கு ரூபாய் 82.50 இலட்சம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு 24.75 கோடி ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஆவினுக்கு இது பெரும் சவாலாக அமையும்.

லிட்டருக்கு பால் கொள்முதல் விலையை தற்போது அறிவிக்கப்பட்டதை விட கூடுதலாக உயர்த்த வேண்டும். தீவன மானியத்தை அதிகரித்து வழங்க வேண்டும். விடியா தி.மு.க ஆட்சிக்கு வந்த போது பால் கொள்முதல் 38 இலட்சம் லிட்டர் வரை இருந்தது. தனியார் பால் கொள்முதல் விலை உயர்வுக்கு பின் ஆவினின் பால் கொள்முதல் குறைந்து விட்டது. சரியான திட்டமிடுதலிலிருந்து தவறி விட்டதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு அளவில் தமிழகம் பால் கொள்முதலில் 2-வது இடத்திலிருந்து தற்போது 5-வது இடத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மேலும் பின்னோக்கி தள்ளப்படும் நிலை ஏற்படும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் என துணிச்சலாக அறிவித்தார். இதன் வாயிலாக பால் கொள்முதல் 42 இலட்சம் லிட்டர் வரை அதிகரித்தது. அம்மாவின் துணிச்சலான செயல்பாடுகள் தற்போது உள்ள விடியா தி.மு.க ஆட்சியில் இல்லை. தனியார் பால் பண்ணைகள் கொள்முதல் விலையை ரூ. 2 வரை குறைத்த பின்பு தான், ஆவின் நிறுவனம் ரூ. 3 கொள்முதல் விலையை தற்போது உயர்த்தி உள்ளது. இதை ஒப்பிடும் போது ஆவின் நிர்வாகம் தனியாருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற தோற்றம் உறுதியாகிறது. கொள்முதல் விலையை ஆவின் நிர்வாகம் ரூ. 3 ஆக உயர்த்தி கொடுப்பதால், தனியார் நிறுவனம் மீண்டும் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஆவினுக்கு எந்த சூழ்நிலையிலும் பால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்கனவே இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலேயே பால் உற்பத்தியை அதிகரிக்க இயலாத அமைச்சர் மனோ தங்கராஜ் எவ்வாறு மாநில அளவில் பால் உற்பத்தியை அதிகரிக்க போகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பால் உற்பத்தி குறித்த விவரங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் சங்கப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து தற்காலிக பணிநீக்கம் செய்வது வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் உள்ளது.

பால் கூட்டுறவு சங்கங்கள் பால் உற்பத்தியாளரிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலின் அளவுக்கு ஏற்ப, லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் விதம் மாதம் தோறும் மாவட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்துக்கு கப்பம் செலுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
இதன் காரணமாக பால் கொள்முதல் விலையை அரசு ரூ. 3 ஆக உயர்த்தினாலும் ரூ. 2 மட்டுமே பால் கொள்முதல் விலையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல்களும் தெரிய வருகிறது.

பால் உற்பத்தியாளருக்கு நியாயமான கொள்முதல் விலையையும், நுகர்வோருக்கு தரமுள்ள பாலினையும் நியாயமான விலையில் விற்பனை செய்வதே பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமாகும். தற்போது உள்ள சூழ்நிலையில் இடுபொருட்கள் விலை உயர்வு, உற்பத்திச் செலவு அதிகரித்து உள்ளதால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டுமென பால் உற்பத்தியாளர்கள் கோரி வந்தனர். அவர்களால் போராட்டம் நடத்தக்கூடும் என்பதன் அடிப்படையில் அரசால் ஆவின் பால் கொள்முதல் தற்போது லிட்டருக்கு ரூ. 3 ஆக உயர்த்தப் பட்டிருந்தாலும் அது உற்பத்தியாளர்களுக்கு பெரிய பயனாக இருக்காது. உற்பத்தியாளர்களின் நலன் கருதி ஆவின் பால் கொள்முதல் விலையை மேலும் கூடுதலாக அதிகரித்து வழங்கிட வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1230

    1

    0