ராகுல் காந்தி நடைபயணத்தின் போது என்ன ஆச்சு..? இப்ப மட்டும் குறை சொல்வதா..? மத்திய அரசுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய அதிமுக..!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 3:50 pm

இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் தவறு இல்லை என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் இதுகுறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பாரத் என்று அழைப்பதில் தவறில்லை என இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 1-ல் (India Constitutional Article 1) தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை பரப்பி மக்களை குழப்பி வருகிறார்கள்.

இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் தவறு இல்லை. ராகுல் காந்தி அவர்கள் நடைபயணம் சென்ற போது அதற்கு என்ன பெயர் வைத்தார் என்றால், பாரத் யோதார் என்றே பெயர் வைத்திருந்தார். பாரத் என்ற பெயர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள பெயர் தான்.

2016-ம் ஆண்டில் இந்தியாவை பாரத் என அழைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு தெரிவிக்கையில், பாரத் என்று அழைக்க விரும்புவோர் பாரத் என்றும், இந்தியா என்று அழைக்க விரும்புவோர் இந்தியா என்றும் அழைக்கலாம். இது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என தெளிவாக தெரிவித்திருந்தோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-ல் எந்த மாற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று இந்த அமர்வு உத்தரவிட்டது.

மீண்டும் 2020-ல் இதே வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அவர்களிடம் இந்தியா என்று அழைப்பதா..? பாரத் என்று அழைப்பதா…? என்ற வழக்கு ஒன்று வந்தது. இந்த மனுவை ரிட் மனுவாக மத்திய அரசுக்கு அனுப்பியது. இதன் மீது மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-ன் படி பாரத் என்ற பெயரை பயன்படுத்துவதில் எந்தவித தவறும் இல்லை என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் டாக்டர் அம்பேத்கார் அவர்களால் என்று வடிவமைக்கப்பட்டதோ, அப்போது சட்டமன்ற அரசியலமைப்பு (Assembly Constitution) விதிகளின்படி இதுகுறித்து விவாதம் வந்தது. ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே அவர்களிடம் வந்த வழக்கில் இது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதன் பேரில் மத்திய அரசு பாரத் என்று அழைக்க முடிவு எடுத்திருக்கலாம். இதன் வாயிலாக இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்று அழைப்பதில் எவ்வித தவறுமில்லை. இதனை உணராமல் அரசியல் கட்சிகள் மக்களை குழப்ப வேண்டாம், என கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 625

    0

    0