சொத்துக்காக வளர்ப்பு தாய், தந்தை எரித்துக் கொலை : மகள், மருமகன் செய்த கொடூர செயல்… நீதிமன்ற தீர்ப்புக்கு குவியும் வரவேற்பு!!
Author: Udayachandran RadhaKrishnan30 June 2022, 9:24 pm
புதுச்சேரி : சொத்துக்காக வளர்ப்பு தாய் தந்தையை எரித்துக் கொலை செய்த மகள் மற்றும் மருமகனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட தர்மபுரி அகத்தியர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது 74) இவரது மனைவி வசந்தா(வயது 60). அவர்களுக்கு குழந்தை இல்லாததால் வசந்தாவின் தங்கை மகளான ஆனந்தியை (வயது 36) வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தனர்.
மேலும் வளர்ப்பு மகளான ஆனந்திக்கு திருமணம் ஆன நிலையில் ஆனந்தி மற்றும் அவரது கணவர் முருகவேல் (வயது 37) ஆகியோர் நாராயணசாமி வீட்டிலேயே இருந்தனர். நாராயணசாமி வசந்தா தம்பதியினர் புதிதாக வீடு ஒன்றை கட்டினர். அந்த வீட்டை தங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு ஆனந்தி மற்றும் முருகவேல் வற்புறுத்தி வந்தனர்.
இதற்கு நாராயணசாமி வசந்தா தம்பதி சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 18.9.2012 அன்று நாராயணசாமி மற்றும் வசந்தா இருவரும் கை கால்கள் கட்டப்பட்டு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டனர்.
வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்த ஆனந்தி மீது மண்ணெண்ணெய் இருந்தது. இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் போலீசார் ஆனந்தி மற்றும் அவரது கணவர் முருகவேளை கைதுசெய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தி மற்றும் முருகவேலுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.