மக்கள் பணத்தை கொள்ளையடித்தவருக்கு வக்காலத்தா? வெட்கமா இல்ல.. அண்ணாமலையை திட்டும் பிரபலம்!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2024, 11:24 am
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவை தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்.
அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் பாஜக நிர்வாகியும், தற்போதைய அதிமுக நிர்வாகியுமான நடிகை காயத்ரி ரகுராம், பண விஷயங்களில் நீங்கள் எப்போதாவது மக்களுக்காக உங்கள் அக்கறையை உயர்த்தியுள்ளீர்களா? நீங்களும் பாஜகவும் எப்போதும் மக்களை ஏமாற்றுவதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறீர்கள்.
மோசடி செய்ததற்காக அவர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அவர் குற்றவாளி இல்லை என்றால் சட்டம் அவரை விடுவிக்கும்.கஷ்டப்பட்டு சம்பாதித்தவர்கள்/ஓய்வூதியப் பணம் பல ஆண்டுகளாக மயிலாப்பூர் அசோசியேஷனில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
தேவநாதன் யாதவை வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது, அந்த அசோசியேஷன் பணத்தை அவர் பாஜக 2024 தேர்தலுக்கு பயன்படுத்தியதாக தகவல்.
பணத்தை திருப்பி கொடுக்க நிறைய நேரம் கொடுக்கப்பட்டது. அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டு, இப்போது பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். வெட்கக்கேடானது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.