ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கறிஞர்.. சென்னை மாநகரப் பேருந்தில் அதிர்ச்சி!
Author: Hariharasudhan7 December 2024, 4:26 pm
சென்னை புழல் அருகே, ஓடும் அரசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது வழக்கறிஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இதற்காக தனது வீட்டில் இருந்து தினமும் மாநகரப் பேருந்து மூலம் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
அந்த வகையில், சம்பவத்தன்று, அவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு, மாலை அம்பத்தூரில் இருந்து மாநகரப் பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அந்தப் பேருந்தில், புழல், அந்தோணியார் கோயில் 3வது தெருவைச் சேர்ந்த குருமூர்த்தி (58) என்பவர் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவர், அந்த இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், உடனடியாக பேருந்தில் வைத்தே குருமூர்த்தியிடம் தகராறு செய்து உள்ளார். பின்னர் இது குறித்து அறிந்த மாநகரப் பேருந்து ஓட்டுநர், புழல் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து, இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட குருமூர்த்தியை போலீசில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் குருமூர்த்தியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னையும் கூப்டாங்க தம்பி.. ஆனா திருமா.. சீமான் பரபரப்பு பேச்சு!
முதற்கட்ட விசாரணையில், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குரு மூர்த்தி என்பவர் வழக்கறிஞர் என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு ஒரு வழக்கறிஞரே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.