10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம்… குழந்தையை பெற்றெடுக்கும் ஆசையில் சென்ற கர்ப்பிணி பெண் : பிரசவத்தின் போது நடந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 9:45 am

விருதுநகர் ; விருதுநகரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு பிரசவத்தின் போது நடந்த சோகம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை பாரதி நகரைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி பன்னீர்செல்வம் (40) – முத்துமாரி (31) தம்பதி. இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 10 ஆண்டுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்து ஒரே வாரத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இந்த நிலையில், மீண்டும் 10 ஆண்டுக்கு பின்னர் கர்ப்பம் தரித்த முத்துமாரி, பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை காலை சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முத்துமாரிக்கு உடல்நிலை சற்று மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அன்றைய தினம் மாலையே, விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் முத்துமாரிக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இறந்த குழந்தையின் உடலை உறவினர்களுக்கு காட்டிய மருத்துவமனை நிர்வாகம், தாய் முத்துமாரியை பார்க்க நீண்ட நேரமாக மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முத்துமாரியை பார்க்க மாலை வரை மருத்துவ துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் அனுமதிக்காத நிலையில், தொடர்ந்து குடும்பத்தினர் பிரச்சனையில் ஈடுபட்டதை அடுத்து, முத்துமாரி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியின் உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி, மாவட்ட நிர்வாகம் இறப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, திடீரென அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவமனை முன்பு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா அவர்களுடன் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…