மிக்ஜாம் புயலுக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய பேரிடர் மீட்பு குழு : தென்மாவட்டங்களில் தீவிரம் காட்டும் மழை!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 2:50 pm

மிக்ஜாம் புயலுக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய பேரிடர் மீட்பு குழு : தென்மாவட்டங்களில் தீவிரம் காட்டும் மழை!

வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரிக் கடல் பக்கம் நகர்ந்துள்ளது. இதனையடுத்து தென் தமிழ்நாட்டில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைப்பகுதியில் இடைவிடாத தொடர் மழை கொட்டி வருகிறது. நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் அதிகபட்சமாக 19 செமீ மழை பதிவானது. ஊத்து எஸ்டேட்டில் 16 செமீ, காக்காச்சியில் 15 செமீ, மாஞ்சோலையில் 13.5 செமீ மழை பதிவானது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை முதலே இடைவிடாத அடைமழை பெய்து வருகிறது.

இதனால் திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

மேற்கு தொடர்ச்சி மாவட்ட அருவிகளில் வெள்ளம் கொட்டுகிறது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சேர்வலாறு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் ஆறுகளில் குளிக்கவோ, துவைக்கவோ, படம் எடுக்கவோ இறங்கக் கூடாது என தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே இந்த நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 100க்கும் அதிகமானோரை கொண்ட இந்த பேரிடர் மீட்பு குழுக்கள், 3 மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மீட்பு பணிகளில் களமிறங்குவர்.

தென் தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை கொட்டித் தீர்க்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் மாவட்டங்களீல் அதிகபட்சமாக 20 செமீ மழை பதிவாகும் என்கிறது வானிலை ஆய்வு மையம். ஆனால் தனியார் வானிலை ஆய்வாளர்களோ 30 செமீ முதல் 50 செமீ வரை தென் மாவட்டங்களில் மழை பதிவாகும் என எச்சரிக்கின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…