மீண்டும் தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பட்டதாரி இளைஞர் விபரீத முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan12 January 2023, 9:12 pm
ஓட்டப்பிடாரம் அருகே ராமநாதபுரத்தில் ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ராமநாதபுரம் கீழ தெருவை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் பாலன் (வயது 30) இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஆன்லைன் சீட்டு விளையாடு பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியில் விளையாடி சுமார் 3 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது தந்தை வங்கிகடன் செலுத்துவதற்காக கொடுத்த ரூபாய் 50,000 பணத்தையும் வைத்து பாலன் இன்று அதிகாலை 4 மணி வரை ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
இதில் விரக்தி அடைந்த பாலன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .