காற்றில் பறந்த மேலிட அட்வைஸ்… மீண்டும் திமுக மேயருடன் மோதிய திமுக கவுன்சிலர்கள்… உள்கட்சி கோஷ்டியால் நெல்லையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 8:19 pm

அமைச்சர், எம்எல்ஏ அறிவுரை வழங்கிய பிறகும் நெல்லையில் மேயருடன் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெற்றதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மாதம் ஒருமுறை கூட்டம் நடைபெற வேண்டும் விதிமுறைகள் இருந்தும், நெல்லை மாநகர திமுகவில் நிலவும் கடும் உள்கட்சி பூசல் காரணமாக இரண்டு மாதமாக கூட்டம் தடைப்பட்டது.

அதாவது மேயர் சரவணன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அப்துல் வகாப் மாவட்ட செயலாளராக இருந்த போது, தனது ஆதரவு கவுன்சிலர்கள் மூலம் மேயர் சரவணனுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அப்துல் வகாப் பக்கம் இருப்பதால் அவர்கள் அனைத்து மன்ற கூட்டங்களிலும் மேயருக்கு எதிராக கோஷம் எழுப்புவது, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது, மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவது என பிரச்சனையை கிளப்பி வந்தனர். ஆளுங்கட்சி கவுன்சிலர்களே ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவது அதிகாரிகள் மத்தியிலும் முகம் சுழிக்க செய்தது.

மேயருடனான மோதலை தொடர்ந்து திமுகவில் அப்துல் வகாப்பின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் மைதீன்கானுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. மேயர் சரவணன், மைதீன்கான் அணியில் உள்ளார். எனவே தொடர்ச்சியாக தற்போது வரை அப்துல் வகாப் அதிக எண்ணிக்கையில் கவுன்சிலர்களை தனது பக்கம் வைத்துக் கொண்டு மன்ற கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்வதாக ஒரு புகார் உள்ளது.

இந்த விவகாரம் கட்சியின் தலைமைக்கு சென்றதால் சமீபத்தில் நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு, நெல்லையில் ரகசிய இடத்தில் வைத்து மேயர், கவுன்சிலர்கள் மற்றும் அப்துல் வகாப், தற்போதைய மாவட்ட செயலாளர் மைதீன்கான் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அரசுக்கும், முதல்வருக்கும் கெட்ட பெயர் ஏற்படாத வகையில், மன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்தி முடிக்க கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

மன்ற கூட்டம் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என அப்துல்லா வகாப்புக்கும், தனிப்பட்ட முறையில் அமைச்சர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. முதல்வர் உத்தரவின்படி அமைச்சரே பேச்சுவார்த்தை நடத்தியதால் இனிமேல் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பிரச்சனை இருக்காது என பலரும் எதிர் பார்த்தனர்.

இது போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று இரண்டு மாதங்களுக்கு பிறகு, நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராதமாக அப்துல் வகாப் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அவர் கூட்டத்தில் பேசும்போது:- சாலை குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். இந்தியாவுக்கே முன்மாதிரியாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கு களங்கம் ஏற்படாத வகையில் கவுன்சிலர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எந்தவிதமான சலனங்களுக்கும் ஆளாகாமல் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று சில அறிவுரைகளை கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

கட்சி தலைமை உத்தரவின் பெயரில் தான் சட்டமன்ற உறுப்பினர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்று சமரசமாக செல்லும் வகையில் சிறப்புரையாற்றியதாக நம்பப்பட்டது.

ஆனால் சட்டமன்ற உறுப்பினர் சென்ற சில மணி நேரத்தில் மீண்டும் நெல்லை மாநகராட்சிக்குள் பிரச்சனை வெடித்தது. அதாவது, கூட்டம் முடிந்த பிறகு அப்துல் வகாப் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் சிலர், மேயர் அறைக்குள் சென்று ரகசியமாக எதையோ பேசியுள்ளனர். இதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

மேயர் தான் தனது ஆதரவாளர் மூலம் வீடியோ எடுப்பதாக கூறி கவுன்சிலர்கள் மேயரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் வீடியோ எடுத்த நபரை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து துணை ஆணையர் தலைமையில் அங்கு வந்த போலீசார் இரு தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விசாரணையில் செல்போனில் வீடியோ எடுத்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பதும், அவர் மேயருக்கு வேண்டிய நபர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, திமுக கவுன்சிலர்கள், காளீஸ்வரன் கையில் இருந்த இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து, அனுமதி இன்றி தங்களை வீடியோ எடுத்ததாக கூறி நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரண்டு செல்போன்களையும் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

மேலும் மாநகராட்சி ஆணையரிடமும், கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளனர். நெல்லை மாநகராட்சியில் நடைபெறும் குழப்பத்திற்கு முக்கிய காரணமான பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் இன்று மன்ற கூட்டத்தில் நேரில் வந்து உரையாற்றியதால் பிரச்சினை முடிந்து விட்டது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கவுன்சிலர்கள் மேயருடன் மோதி கொண்ட சம்பவம் திமுகவினர் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 401

    0

    0