தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக, பாஜக!
Author: Hariharasudhan1 January 2025, 5:14 pm
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடினால், தங்கள் கருத்துகளைக் கேட்க வேண்டும் என அதிமுக, பாஜக தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது வேறொரு நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
இதனிடையே, தாமாக வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க உத்தரவிட்டு உள்ளது. மேலும், தேசிய மகளிர் ஆணையமும் சென்னையில் முகாமிட்டு, விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, அதிமுகவின் இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கேவியட் மனுவில், “ஏற்கனவே இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் SIT விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஒருவேளை தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், தங்கள் தரப்பு வாதத்தையும் ஏற்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: எதிர்நீச்சல் 2-வில் இவரா…லீக்கான புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்..!
அதேநேரம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பாஜக தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், தங்களது கருத்தினை கேட்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.