அதிமுகவை பொய் வழக்குகளால் அழிக்க முடியாது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
Author: kavin kumar26 February 2022, 10:01 pm
கோவை : கடந்த 9 மாதகாலமாக தமிழகத்திற்கு ஒன்றும் செய்யாத திமுக முறைகேட்டின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது என கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் செய்த முறைகேடுகள், மற்றும் அதிமுகவினர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகள் குறித்தும், அதிமுக தலைமை அறிவித்துள்ளபடி 28 ஆம் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்டம் குறித்தும் கோவை இதயதெய்வம் மாளிகையில் கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ். பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “கோவை மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றதால் இங்கு திமுக தனிக்கவனம் செலுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு நம்மை வீழ்த்த முயற்சித்தது. திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க எந்த எண்ணமும் இல்லை. ஏனென்றால் அவர்கள்எதுவும் செய்யவில்லை. திமுகவுக்கு வாக்களிக்க ஏதாவது ஒரு காரணம் வேண்டும். கடந்த ஒன்பது மாத காலத்தில் எந்த ஒரு திட்டங்களையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இது முழுவதும் மக்கள் தமக்கு வாக்களித்த நிலையில் நாம் தோற்று உள்ளோம்.
நமது வெற்றிகளை தட்டிப்பறித்து முதுகில் குத்தி உள்ளனர். உயிரைக் கொடுத்து நமது தொண்டர்கள் பாடுபட்டார்கள். ஆனால் தேர்தல் முடிவுகளோ மாறி வந்துள்ளது. நிறைய வார்டுகளுக்கு திமுக செல்லவில்லை. மேலும் தோற்று விடுவோம் என திமுகவினரே கூறியுள்ளனர். இதையும் மீறி திமுகவினர் வெற்றி பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு ஒன்றும் செய்யாத திமுக முறைகேட்டின் மூலமே வெற்றிபெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கியதிலிருந்து வார்டிற்குள் செல்லாமலே திமுக வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடியார் அவர்கள் தெளிவாக தெரிவித்துள்ளார்.
வாக்கு இயந்திரத்தில் வி.வி.பேட் வைத்திருக்க வேண்டும். ஆனால் வி.வி.பேட் பொருத்தாமல் விட்டது திமுகவினருக்கு சாதகமாக அமைந்துள்ளது. வி.வி.பேட் பொருத்தாதது பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். திமுகவின் வெற்றி செயற்கையாக பெற்றுள்ளது. ஜனநாயக ரீதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வெற்றி வாகை சூடவேண்டிய இடத்தில்கூட அதிமுகவிற்கு வாக்குகளே விழவில்லை. அதிமுகவிற்குத்தான் வாக்களித்தோம் என்று
வாக்காளர்களோ அதிமுக வேட்பாளர்களின் வீட்டிற்கு வந்து சத்தியம் செய்கிறார்கள்.
நமது வெற்றியை பெருக்க திமுகவோடு அரசு இயந்திரமே சேர்ந்து சதிசெய்து உள்ளது வெற்றியை பறித்து உள்ளது.தோல்வி சகஜம் என்றாலும் பல பூத்களில் வாக்குகள் மாறியுள்ளது. நம்மை வெல்ல யாரும் கிடையாது. ஜனநாயக ரீதியாக நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம்.திமுக அரசு பழிவாங்கும் நோக்குடன் முன்னாள் அமைச்சரும், திமுகவினரின் முறைகேடுகளை ஊடகத்தின் மூலம் கருத்துக்களை பதிவு செய்யும் ஜெயக்குமார் மீது பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றிபெற்ற அதிமுகவினர் மீது பொய்வழக்கு பதிவு செய்து மிரட்டுகிறார்கள். மேலும் கோவை மாநகராட்சி 100 வது வார்டில் திமுகவினரால் கத்திகுத்து பட்டு காயமடைந்தது அதிமுகவினர். ஆனால் காவல்துறையினர் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
காவல்துறையினர் நேர்மையாக, நடுநிலையுடன் நடந்து கொள்ளவேண்டும்,திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கழகத்தினர் மீது பொய் வழக்குப் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. எவ்வளவு வழக்கு போட்டாலும் அதிமுக அஞ்சப் போவதில்லை. உங்களின் பொய் வழக்கு அதிமுகவினரை ஒன்றும் செய்யமுடியாது. இதேபோல் கடந்த காலங்களில் நடந்து கொண்டதால்தான் திமுக எதுர்காட்சியாககூட சட்டமன்றத்தில் அமரமுடியாத நிலை ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாத காலமாக திமுக என்ன செய்தது. உங்களுக்கு எதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். எங்களுக்கு உரிமை உள்ளது. எத்தனையோ திட்டங்களை தந்துள்ளோம். வழக்குகளைப் போட்டு இயக்கத்தை அழிக்க முடியாது கழகத்திற்கு அறிவு என்பது கிடையாது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றியைப் பார்த்து மக்களே குழம்பியுள்ளனர். உறுதியாக பாராளுமன்ற தேர்தலில் வெல்வோம். 28 ஆம்தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்டத்தில் திரளாக கலந்துகொண்டு திமுகவின் முகத்திரையை கிழிக்கவேண்டும். தோல்வியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். என்றார். இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கழக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ, கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ, கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்எல்ஏ, கழக அமைப்பு செயலாளர்கள் செ.தாமோதரன் எம்எல்ஏ, ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் விபி.கந்தசாமி,
கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டிகே.அமுல் கந்தசாமி எம்எல்ஏ, மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ, கோ ஆஃப் டெக்ஸ் வாரியத் தலைவர் ஏ.வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.கே.சின்ராஜ், எட்டிமடை ஏ.சண்முகம், கஸ்தூரி வாசு, முத்துக்கருப்பண்ண சாமி, பிரேமா, முன்னாள் எம்பிக்கள் யுஆர்.கிருஷ்ணன், தியாகராஜன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் தோப்பு க. அசோகன், கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் சின்னவேடம்பட்டி சுப்பையன், கழக விவசாய பிரிவு துணைச் செயலாளர் ஓவிஆர்.ராமச்சந்திரன்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் விக்னேஷ் சுப்பையன்,மற்றும் கோவை புறநகர் தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பகுதி, வார்டு கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.