திமுகவுக்கு எதிராக அதிமுக, காங், கம்யூ ஆர்ப்பாட்டம்.. திருப்பூரில் பரபரப்பு!

Author: Hariharasudhan
28 November 2024, 1:33 pm

திருப்பூர் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் தலையில் துண்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் சாதாரண மன்றக் கூட்டம் இன்று (நவ.28), மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், தீர்மானங்களை வாசித்தார். அப்போது, அதிமுக கவுன்சிலர்கள் குறுக்கிட்டனர்.

தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றிற்கு எதிராக கேள்வி எழுப்பினர். அது மட்டுமல்லாமல், கறுப்பு உடையில் வந்த அதிமுக கவுன்சிலர்கள், மன்றத்தில் அமர்ந்து தலையில் துண்டை முக்காடு போல் அணிந்து கொண்டு உயர்த்தப்பட்டப் வரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், இதனை ஒரு பொருட்டாக ஏற்றுக் கொள்ளாத மேயர் தினேஷ்குமார், தீர்மானங்களை முழுவதுமாகக் கூட வாசிக்காமல், தீர்மான எண்களை மட்டும் சொல்லிவிட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். அது மட்டுமின்றி, கூட்டம் நிறைவுற்றதாகவும் கூறிவிட்டுச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tiruppur Protest

இதனையடுத்து, மன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த அதிமுக கவுன்சிலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆகியோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பதவி போயும் மவுசு குறையலயே… ரோஜாவிடம் செல்பி எடுக்க முண்டியடித்த பக்தர்கள்!

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கவுன்சிலர்களையும் கைது செய்து, வேனில் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக, இன்று திருப்பூர் சாதாரண மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன என்பதே தெரியாத சூழல் உருவாகி உள்ளது.

  • abhirami spoke in tamil in thug life movie press meet இங்கிலிஷா? நோ- தக் லைஃப் விழாவில் தக் லைஃப் காட்டிய அபிராமி! குவியும் பாராட்டுக்கள்