அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நீதிபதி குலசேகரன் ஆணையம் முடக்கம் : திமுக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan1 April 2022, 4:11 pm
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நீதிபதி குலசேகரன் ஆணையத்தை செயல்படுத்தாமல்
அரசு முடக்கியுள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாடியுள்ளார்.
விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் முதல் அரசியலமைப்பு சாசனமே, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் திகழ்ந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் 69 சதவீதம், இடஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் திகழ்ந்து வருகிறது. இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில்தான் அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த உள்ஒதுக்கீட்டை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட, நிலையில், இந்த உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக எம்பியாக உள்ள வில்சன் நீதிமன்றத்தில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நீதிபதி குலசேகரன் ஆணையத்தை செயல்படுத்தாமல் அரசு முடக்கியுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கை முறையாக நடத்தி இருந்தால், தற்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்தியா முழுவதும் ஆய்வு நடத்தி, 1931-ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் படி, இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு முன்வர வேண்டும். தவறும்பட்சத்தில், கல்வி வேலை வாய்ப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 69 சதவீத இடஒதுக்கீடும் பறிபோகும் நிலை ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில் சாதனை திட்டங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் பாலியல் உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது வேதனை அளிப்பதாக உள்ளது என்று கூறிய சி.வி.சண்முகம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, மிக விரைவில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.