வசந்த மாளிகையில் செந்தில்பாலாஜி… எம்ஜிஆர், ஜெ., போன்ற தெம்பு, திராணி CM ஸ்டாலினுக்கு இல்லை : ஜெயக்குமார் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan22 July 2023, 4:26 pm
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள மாநாடு தொடர்பாகவும், அங்கு நிறைவேற்றவுள்ள தீர்மானங்கள் தொடர்பாகவும் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், பொன்னையன், செம்மலை, தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் 2 கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் வழங்காமல் திமுகவினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
1000 ரூபாய் வழங்க ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் விதிக்கிறார்கள். திமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்குத் தான் விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது.
தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்ப படிவம் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் திமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தான் விண்ணப்ப படிவம் வழங்குகின்றனர்.
திமுக மாவட்ட செயலாளர்களால் அடையாளம் காட்டப்படுபவர்களுக்கே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். தகுதியுடையவர்களுக்கு வழங்குவது இல்லை. திமுகவைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே விண்ணப்ப படிவம் கொடுக்கிறார்கள் என விமர்சித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏ வகுப்பு சலுகை தாண்டி, விதிகளை மீறி செந்தில் பாலாஜிக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
விதிமீறல் குறித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைக்குச் சென்ற பின்னரும் செந்தில் பாலாஜி ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த தெம்பு, திராணி முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளதா? ஆட்சி போய்விடும் என்ற பயத்தினால்தான் செந்தில்பாலாஜியை ஸ்டாலின் பாதுகாக்கிறார். கைதி செந்தில்பாலாஜி வசந்த மாளிகையில் வாழ்வது போன்ற வசதி சிறையில் செய்துதரப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை பிடியில் திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக சிக்கி வருகின்றனர். அமைச்சர் பொன்முடி வழக்கில் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தது 1 சதவீதம் மட்டுமே. இன்னும் 9 சதவீதம் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. அமலாக்கத்துறை வரட்டும் என்று சொல்வதில் இருந்தே உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ள பயம் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.