அரசாங்கம் கட்டினால் தப்பில்லை.. மக்கள் கட்டினால் இடிப்பதா? ஸ்கோர் செய்த செல்லூர் ராஜூ!
Author: Udayachandran RadhaKrishnan14 November 2024, 2:40 pm
மதுரையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பிபி குளம் முல்லை நகர் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து முல்லை நகர் பகுதி முழுவதும் பிபிகுளம் கண்மாய் பிடிப்பு பகுதியில் பொதுமக்கள் வீடுகளை ஆக்கிரமித்து கட்டி உள்ளதாகவும், முல்லை நகர் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளை இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது, மேலும் முல்லை நகர் பகுதியில் உள்ள வீடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு சார்பில் நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளை அரசாங்கம் ஆக்கிரமிப்பில் இடிக்கக் கூடாது என முல்லை நகர் பகுதி மக்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து முல்லை நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசுகையில், இந்த முல்லை நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்படைந்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள மக்களை காலி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதியில் மக்கள் இருந்தால் அதை காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சொல்கிறது.
ஆளுகின்ற திமுக கட்சி தான் மக்கள் பிரச்சனைகளில் அரசியல் செய்வார்கள், இங்கு வசிக்கக்கூடிய மக்கள் வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளனர்.
முல்லை நகர் பகுதிக்கு வரக்கூடிய தண்ணீர் என்பது கழிவு நீர் செல்லக்கூடிய வாய்க்கால் வழியாக வருகிறது. வாய்க்கால்களில் கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படியுங்க: மறுத்த கோர்ட்.. பறந்த கஸ்தூரி.. 2 தனிப்படைகள் அமைப்பு!
இங்க இருக்கக்கூடிய மக்களை அரசாங்கம் காலி செய்யக்கூடாது என்பது எங்களுடைய கோரிக்கை. குடிசை மாற்று வாரியம் மூலமாக இங்கு இருக்கக்கூடிய மக்களிடம் பட்டா கொடுப்பதற்கு பணம் வசூல் செய்துள்ளார்கள்.
அரசாங்கமே பட்டா கொடுப்பதற்கு பணம் வசூல் செய்துள்ளார்கள். இங்க இருக்கக்கூடிய வீடுகளை இடித்தால் மக்களின் வாழ்க்கை நசுங்கிப் போகும்.
குருவி சேர்ப்பது போல பணம் சேர்த்து வீடு கட்டி உள்ளார்கள், இந்த அரசாங்கம் தாய் உள்ளத்தோடு பரிசீரித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இன்னும் ஓராண்டு காலத்தில் தேர்தல் வரப்போகிறது, இங்க இருக்கக்கூடிய மக்கள் ரேஷன் கார்டு வைத்துள்ளார்கள். மாநகராட்சி வரி, குப்பை வரி குழாய் வரி அனைத்தும் கட்டி வருகிறார்கள், முல்லை நகர் பகுதி மக்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
இங்கிருந்து மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும், பல்வேறு நீர் பிடிப்பு பகுதிகளில் அரசாங்கமே கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
நீர் பிடிப்பு பகுதிகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது, எங்கள் அதிமுக அரசாங்கம் இருந்தபோது இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளோம்.
இப்பகுதி மக்களுக்கு நியாயம் வேண்டும் ஏழை பாழைகள் வாழக்கூடிய பகுதி இது, 60 70 வருஷமாக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க நிச்சயமாக சாத்தியம் உள்ளது, சொக்கி குளம் கண்மாய் முழுவதும் தற்போது வீடுகள் தான் உள்ளது மதுரையில் பல நீர் பிடிப்பு பகுதிகளில் அரசாங்க கட்டிடங்கள் உள்ளது.
வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களுக்கு நான் தெளிவுபடுத்துகிறேன், இங்கே விவசாய நிலம் எங்கு இருக்கிறது? இது நீர் பிடிப்பு பகுதியே கிடையாது, இதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஆறுகளில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இல்லை, நீர் செல்லக்கூடிய வாய்க்காலை கட்டினாலே இப்பிரச்சினை தீர்ந்துவிடும், அதிமுக ஆட்சி காலத்தில் செய்த நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் ஏன் செய்யக்கூடாது? இந்த நல்ல நடவடிக்கையை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்ய வேண்டும்.
அரசாங்கம் கட்டினால் ஏற்றுக்கொள்ளலாம் ஏழை மக்கள் வீடு கட்டினால் இடிக்கலாமா? அமைச்சரையும் நான் கேட்கிறேன், அரசாங்கம் கட்டிய இடங்களை இடித்துவிட்டு இப்பகுதிக்கு வரச் சொல்லுங்கள்.
நாங்கள் அரசியல் அவியல் செய்ய வரவில்லை, ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எங்கள் ஆட்சியில் நாங்கள் காப்பாற்றி கொடுத்தோம்.
இதில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்பதையெல்லாம் கிடையாது ஆளுகிற கட்சி மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.