வீடு புகுந்து அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் கடத்தல் : காருடன் மாயமான கும்பல்… விசாரணையில் திக்..திக்..!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2023, 9:33 pm
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் இருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து இனோவா காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சார்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 46). இவர் பல்லவடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளராக உள்ளார்.
மேலும் இவரது மனைவி ரோஜா ரமேஷ் குமார் (வயது 44) என்பவர் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1 வது அதிமுக ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வரும் நிலையில் இவர்களுக்கு ஜாய் வயது 24 என்ற மகளும், ஜேக்கப் 22 என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகியோர் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த இனோவா கார் ஒன்றும் காணாமல் போனது.
இந்நிலையில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்ட நிலையிலும் ஹார்ட் டிஸ்க் எனப்படும் சேகரிப்பு தளவாடமும் காணாமல் போனதால் இவர்கள் இருவரும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜாவின் கணவர் ரமேஷ் மற்றும் ரோஜாவின் தம்பி டேவிட் சுதாகர் ஆகியோர் கும்மிடிப்பூண்டி காவல் கண்காணிப்பாளர் கிரியா சக்தி அவர்களை சந்தித்து புகார் மனுவை வழங்கினார்கள்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த டிஎஸ்பி கிரியாசக்தி, சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தவுடன் கடத்தலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகியோரின் செல்போன்களும் அணைக்கப்பட்டுள்ளதால் தொடர்பு கொள்வும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் கடத்தப்பட்ட இனோவா கார் தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் வழியாக ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்றதாக சில அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்ததை எடுத்து தமிழக போலீசார் ஆந்திரா சென்று தேடி வருகின்றனர்.
அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
0
0