தொகுதியில் உள்ள 10 பிரச்சனைகளை பட்டியலிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் : அடுக்கடுக்கான புகார்களுடன் ஆட்சியரிடம் மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 4:13 pm

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களது தொகுதியில் நீண்டகாலமாக உள்ள முக்கியமான 10 பிரச்சினைகள் அல்லது குறைகளை மாவட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து 10 முக்கிய கோரிக்கைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

9 பேரும் அவரவர் தொகுதியில் உள்ள முக்கியமான 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு அளித்து மாவட்ட ஆட்சியரிடன் அப்பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி அரசாங்கம், சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10 கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என கடிதம் வந்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அந்த கோரிக்கையில் அதிகமாக முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அவசியமான கோரிக்கைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். திமுக அரசு வந்து ஒன்றரை வருடமாகிறது என தெரிவித்த அவர், முந்தைய ஆட்சியில் சாலைகள் அனைத்தும் எவ்வாறு இருந்தது என அனைவருக்கும் தெரியும் எனவும் தற்போது சாலைகள் அனைத்தும் மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதனை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதலாவதாக அளித்துள்ளதாக கூறினார். மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக, பைப் லைன் தோண்டிய சாலைகள் அனைத்தும் மழை வருவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்தார். எனவே இந்த அரசு முதலில் சாலைகளை சரி செய்ய வேண்டுமென கூறினார்.

ஜெயலலிதா காலத்தில் ஒப்பந்தம் கோரிய 500 சாலைகளை இந்த அரசாங்கம் ரத்து செய்ததாகவும், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாலங்கள் முடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தையும் கோரிக்கையாக அளித்ததாக தெரிவித்தார். தற்போது குடிநீர் விநியோகம் செய்ய 10,15 நாட்கள் ஆவதாகவும் கூறினார். அணைகளில் தண்ணீர் இருந்தும் அதனை சரியாக விநியோகிப்பதில்லை என தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் எனவே அந்த திட்டங்களை எல்லாம் இந்த அரசு நிறைவேற்ற வேண்டுமென கூறினார். கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்தையும் செய்ய வேண்டுமென கூறினார்.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை 50% நிறைவடைந்த பணிகளை ஏதோ உள் நோக்கத்தோடு நிறுத்தி விட்டதாகவும் அதனை தொடர்ந்து செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளதாகவும், அதனால் சிட்டிக்குள் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும் என தெரிவித்தார். ஊழல் வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக திமுக எதிர்ப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 453

    0

    0