திமுகவினர் தாக்கியதால் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பெண் வேட்பாளர் : நேரில் ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2022, 3:32 pm
விழுப்புரம் : அதிமுக பெண் வேட்பாளர் நேற்று இரவு காவல் நிலையம் அருகே தாக்கப்பட்ட சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண் வேட்பாளரை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார்
நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனம் 13 வது வார்டு வால்டர் ஸ்காட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் தகராறு தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற அதிமுக பெண் வேட்பாளர் சுதா அவரது கணவர் சரவணன் மற்றும் அவர் மகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது திண்டிவனம் அடுத்த ரோசனை காவல் நிலையத்தில் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் ரோசனை காவல் நிலையம் எதிரில் இரவு ஒன்று திரண்டனர்.. அப்போது காவல் நிலையத்தில் இருந்த விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட அதிகாரிகளிடம் தாக்குதல் நடத்திய திமுகவினரை நாளை காலைக்குள் கைது செய்யாவிட்டால் திண்டிவனம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உட்பட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தற்போது கலைந்து சென்றுள்ளனர்..
இந்நிலையில் தாக்குதலில் பலத்த காயமடைந்த அதிமுக பெண் வேட்பாளர் சுதா விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டூ தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற்றுவரும் பெண் வேட்பாளர் சுதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார், மேலும் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சுதாவிடம் சொல்லி ஆறுதல் கூறினார்.
மேலும் தாக்குதலில் காயமடைந்த அவரது கணவர் மற்றும் மகனுக்கும் ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கோரிக்கை விடுத்தார்.