துணிவு படத்தின் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் பரிதாப பலி : பிரபல திரையரங்கில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan11 January 2023, 9:59 am
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ள துணிவு படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய் துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் ‘துணிவு’ படம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படம் தியேட்டர்களில் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கு முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது எதிர்பாரத விதமாக அஜித் ரசிகர் தவறி ரோட்டில் விழுந்தார்.
இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமார் (வயது 19) சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் துணிவு படம் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழ்ந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.