என்னது, வலிமை பட டிக்கெட் ரூ.1,500-ஆ… திண்டுக்கல்லில் தியேட்டர் நிர்வாகத்தை கண்டித்து அஜித் ரசிகர்கள் தர்ணா… மேலாளரை அடிக்க முயன்றதால் பரபரப்பு..!!
Author: kavin kumar21 February 2022, 10:47 pm
திண்டுக்கல் : வலிமை திரைப்படத்திற்கான ரசிகர் ஷோவிற்கான டிக்கெட்டுகளுக்கு திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்க நிர்வாகம் அதிக தொகை கேட்பதாக கூறி ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தியேட்டர் மேலாளரை தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகின்ற 24 ஆம் தேதி அஜீத் நடிப்பில் வெளிவரவுள்ள வலிமை திரைப்படம் திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணிக்கு ரசிகர்கள் காட்சிக்காக திரையரங்கில் டிக்கெட் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை ரசிகர் ஷோ டிக்கெட் அரசு நிர்ணயித்த தொகையை விட டிக்கெட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 வரை அதிக தொகை கேட்பதா க கூறி திரையரங்கு முன்பாக அஜித் ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து திரையரங்கு நிர்வாகத்தினர் அஜித் ரசிகர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தினால் திரையரங்கின் முன்பகுதியில் உள்ள கதவினை அடைத்து பூட்டைப் போட்டு பூட்டிய அஜித் ரசிகர்கள். தகவலறிந்து வந்த நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் அஜித் ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டபோது போலீசாருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே திரையரங்கு மேலாளர் மாயாண்டி அங்கு வந்ததை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மேலாளர் மாயாண்டி தாக்க முயற்சித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. அங்கு கூடியிருந்த காவல்துறையினர் திரையரங்கு மேலாளர் மற்றும் அஜித் ரசிகர்களையும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அஜித் ரசிகர்கள் கலைந்து சென்றனர். திரையரங்கிற்கு பூட்டு போட்டு திரையரங்கு மேலாளரை தாக்கம் முயற்சித்து காவல்துறையினரும் அஜித் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வானது திண்டுக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.