ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் : பாஜகவை வீழ்த்த திருமாவளவன் சொன்ன யோசனை!!
Author: Udayachandran RadhaKrishnan6 June 2022, 10:14 am
2024 ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கு ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வேலூர் வள்ளலாரில் மார்க்சியப் பெரியார் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலின் மூன்றாம் பதிப்பினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.
நூலின் முதல் பிரதியை தமிழியக்கத்தின் மாநில செயலாளர் சுகுமார், வேலூர் மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளர் முகமது சயி, வேலூர் அகரமுதல இலக்கிய மன்றத்தின் தலைவர் சோலை நாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநில தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ள பளுதூக்கும் வீராங்கனை கவிதா விற்கு திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், வேலூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்களின் நியாயமான கோரிக்கையை புரிந்துகொண்டு மக்களின் உணர்வுகளை மதிக்க கூடிய வகையில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆக இருந்த வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைய கூடாது அதற்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஐதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறிய கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை வரவேற்பதாக தெரிவித்தார்.
2024 ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும், பாஜக விற்கு மாற்றாக இந்த அணி அமைய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புவதாக கூறினார்.
0
0