கவுன்சிலர்களுக்கு தெரியாமல் டெண்டர் : திமுக நகர மன்ற தலைவிக்கு எதிராக களமிறங்கிய கூட்டணி கட்சியினர்.. அதிமுக – பாஜகவுடன் கைக்கோர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2022, 7:34 pm
விழுப்புரம் நகர மன்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
விழுப்புரம் நகர பகுதிகளில் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் பணிகளை டெண்டர் விட்டதாக கூறி திமுகவை சேர்ந்த நகர மன்ற தலைவியை எதிர்த்து கூட்டணி கட்சியினர் வெளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் அதிமுக, பாஜக உள்ளிட்ட 17 பேர் கூட்ட அரங்கிற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நகர மன்ற கூட்டத்திற்கு வந்த நகர மன்ற தலைவியை நோக்கி கூட்டணி கவுன்சிலர்கள் சென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சுரேஷ் ராம், நகர மன்ற தலைவியின் அருகே சென்று நகர மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூட்டணி கட்சி கவுன்சிலரே கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
பின்னர் நகர மன்ற தலைவி தமிழ்ச்செல்வி அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்று கூறிவிட்டு சென்று விட்டார். அப்போது 17 கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவியை பதவி விலகக் கோரி முழக்கமிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
திமுகவை சேர்ந்த நகர மன்ற தலைவிக்கு எதிராக எதிர்க்கட்சியினருடன் கூட்டணி கட்சியினரும் இணைந்துள்ளதால் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.