கனமழையால் சேதமடைந்த கோவில்களை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan26 December 2023, 6:16 pm
கனமழையால் சேதமடைந்த கோவில்களை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோவில்கள் மற்றும் வீடுகள் என பல சேதமடைந்தது.
அதுமட்டுமன்றி இதில் சில மாவட்டங்களில் வெள்ளத்தால் சில மக்கள் உயிரிழக்கவும் செய்தனர். இதனையடுத்து, மழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சேதமடைந்த குடிசைக்கு தலா ரூ.10,000, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வட்டங்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ. 6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதம் அடைந்த கோவில்களை சரி செய்ய ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (டிசம்பர் 26)-ஆம் தேதி சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வெள்ளத்தால் சேதம் அடைந்த கோவில்களை சரி செய்யும் விஷயங்கள் பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த கூட்டத்தில் தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சேதமடைந்த திருக்கோவில்களின் கட்டுமானங்கள் அனைத்தும் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.