பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது நாட்டிற்கு கேடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 9:09 pm

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

7000 சதுர அடி பரப்பில் ரூ 12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலை, அவரது பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம், திருமண மண்டபங்கள் உள்ளன. திறப்பு விழாவில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
திராவிட கட்டட கலையுடன் நவீன வசதிகளோடு கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களுக்கும் திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியை நாடு போற்றும் தலைவராக்கிய ஊர் திருவாரூர்.

அண்ணாவை, கருணாநிதி முதன்முறையாக சந்தித்தது திருவாரூரில்தான். என் தந்தைக்கு, என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாக கலைஞர் கோட்டத்தை கருதுகிறேன். கலைஞர் கோட்டம் என்பது அவரது பரிணாமங்களை சொல்லும் கருவூலம் இன்றைக்கும் கருணாநிதி தலைமையிலான ஆட்சியைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறேன்.

சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. “மன்னர்கள் கூட தாங்கள் ஆளும் போது தான் கோட்டமும், கோட்டையும் கட்டுவார்கள். ஆனால் கலைஞரின் மறைவுக்குப் பிறகு இங்கு கோட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது.

இன்னமும் கலைஞர் வாழ்கிறார், ஆள்கிறார் என்பதன் அடையாளமாகத் தான் இந்த கோட்டம் இங்கு அமைந்திருக்கிறது. ‘தேர் மீண்டும் நிலைக்கு வந்து சேர்வது போல் திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த பிறகும் மருத்துவமனையாக, நூலகமாக, கோட்டமாக பயணித்துக் கொண்டிருப்பவர் கலைஞர். அவரை நாடு போற்றும் தலைவராக உருவாக்கிய ஊர் திருவாரூர்.

பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது நாட்டிற்கு கேடு. பாஜகவை மீண்டும் ஆள அனுமதித்தால் தமிழ்நாடே காணாமல் போகும். பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க வேண்டும்.

பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் இந்திய நாட்டிற்கும் கேடாக முடியும். வெற்றி வேண்டும், வெற்றிக்கு முன்னாள் ஒற்றுமை வேண்டும், அதன் முன்னோட்டமாகவே பாட்னாவில் ஜனநாயக மாநாடு நடக்க உள்ளது.

ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக பாட்னாவில் நடக்கும் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்க போகிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 331

    0

    0