அம்பூரின் அன்னை தெரசா காலமானார்.. அமெரிக்க மகப்பேறு மருத்துவருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2024, 9:27 am

ஆம்பூரில் உள்ள பெதஸ்தா மருத்துவமனையில் மகப்பேறு மருத்தவராக பணியாற்றி வந்த ஆம்பூர் அன்னை தெரசா என அழைக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ் ஜி பிராயர் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆம்பூரில் உள்ள பெதஸ்தா மருத்துவமனையில் மருத்துவராக பணிக்கு இணைந்தார்.

திருமணம் செய்து கொள்ளாமல் தனது வாழ்நாள் முழுவதையும் மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்த அவர் தினம்தோறும் கிராமம் கிராமமாக சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது சத்துணவு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவு கொடுப்பது, கால்நடைகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளையும் பலநூறு பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்து சிறந்த மகப்பேறு மருத்துவராகவும் இருந்து வந்தார்.

100கும் மேற்பட்ட ஆதரவற்ற நபர்களுக்கு மாதம் தோறும் உதவிகளை செய்வது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் மக்கள் இவரை ஆம்பூரின் அன்னை தெரேசா என ஐ.ஈ.எல்.சி சபையினர் பட்டம் அளித்து அன்போடு அழைத்து வந்தனர்.

ஆம்பூர் பெதஸ்தா மருத்துவமனையானது கடந்த 10 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் தனி ஒரு பெண்மணியாக அதே மருத்துவமனை வளாகத்தில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

கடந்த 57 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்த ஆலிஸ் ஜி பிராயர் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி உடல் நலக்குறைவால் வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 87 வயதில் உயிரிழந்தார்.,

இந்நிலையில் அவரது உடல் வேலூரில் உள்ள ஐ.ஈ.எல்.சி சபையில் கடந்த இரண்டு நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆம்பூர் பெதஸ்தாவிற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆலிஸ் ஜீ பிராயர் உடலுக்கு கிறித்துவ சபைகள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள லேடிஸ் பங்களா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் பெதஸ்தா மருத்துவமனை அமைந்துள்ள ரெட்டி தோப்பு பகுதியில் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்த கடைசி கிறிஸ்தவ மிஷனரியும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 281

    0

    0