திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அமமுக இருக்கும்.. மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சிக்கு வரும் : டிடிவி தினகரன் உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
3 ஜனவரி 2024, 8:21 மணி
TTV
Quick Share

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அமமுக இருக்கும்.. மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சிக்கு வரும் : டிடிவி தினகரன் உறுதி!

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட (அமமுக) அம்மா மக்கள் முன்னேற கழக பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தொண்டர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

டிடிவி.தினகரன் மேடையில் பேசுகையில், அதிமுக கட்சியை துரோகிகளிடம் இருந்து மீட்க வேண்டும், ஆட்சி அதிகாரம் இருந்ததால் ஏமாற்றி வந்தார்கள். இன்றைக்கு அது இல்லை காலம் நெருங்கி விட்டது.

இந்த பாராளுமன்ற தேர்தல் அந்த துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக அமையும். தமிழ்நாட்டு மக்களோடு சேர்ந்து அந்த துரோகிகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டும். தேர்தல் பணியை இப்போதே துவங்க வேண்டும் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்ற தேர்தல் வரலாம் என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், நானும் ஓபிஎஸ்-ம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே இணைந்து பணியாற்றுவோம் என முடிவெடுத்துள்ளோம்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு சில கட்சிகளுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் நல்லபடியாக முடிந்த பிறகு கூட்டணிக் குறித்து சொல்வது தான் அரசியல் கட்சிக்கு அழகாக இருக்கும். கூட்டணி முடிவான பிறகு முறையாக உங்களுக்கு சொல்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அம்மாவின் இயக்கத்தை கையகப்படுத்தி வைத்துள்ள அந்த சுயநலவாதிகள் மக்கள் மன்றத்திலே அவர்கள் தோல் உரிக்கப்படுகின்ற காலம் வெகு விரைவில் வரும்.

தமிழ்நாட்டு மக்கள் துரோகத்திற்கு என்றைக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிக்கும் காலம் எதிர் காலத்தில் வரும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விஜயகாந்தின் மரணம் உண்மையிலேயே வருத்தப்படக்கூடியது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதனை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கையில் தான் உள்ளது அதைப்பற்றி நான் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு பதில் கூறினார்.

மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காகவும், தீயவர்களிடமிருந்து அம்மாவின் இயக்கத்தை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அமமுக. இந்தக் கொள்கையில், லட்சியத்தில் இருந்து என்றைக்கும் நாங்கள் பின் வாங்க மாட்டோம்.

இரண்டு போது தேர்தல்களில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் இங்கு எனது இயக்கத்தினர் எவ்வளவு ஆர்வமாக வந்துள்ளார்கள் எனபாருங்கள்.
இங்கு வந்த கூட்டம் காசுக்காக வந்த கூட்டம் அல்ல கொள்கைக்காக என்னோடு வந்தவர்கள்.

எடப்பாடி பழனிச்சாமி ஆளும் கட்சியாக இருந்த போதே ஆளும் கட்சி பலனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி உடன் சேர்ந்ததை தவறு என உணர்ந்துதான் ஓபிஎஸ் அவரிடம் இருந்து வெளியேறி அம்மாவின் தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எங்களோடு இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டிய அவசியம் இல்லை.

நாடாளுமன்ற தேர்தலில் சசிகலா பிரச்சாரத்திற்கு வர வாய்ப்புள்ளதா என்று கேள்விக்கு இதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.

பாஜக வெளியிடுவதாக சொன்ன ஊழல் புகார் பட்டியலுக்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆளுகின்ற கட்சி மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது, எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் ஆட்சியினால் தான் மக்கள் இன்றைக்கு கோபப்பட்டு திமுகவிற்கு வாக்களித்தார்கள்.

விடியல் வரும் என நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள் ஆனால் இன்றைக்கு திமுக விடியாத ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்ற மனம் இல்லாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் மாற்று சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வரும் காலத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என டிடிவி தினகரன் கூறினார்.

  • Thiruma அந்த நிகழ்ச்சிக்கு விஜய் வந்தால் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. திருமாவளவன் ஓபன் டாக்!
  • Views: - 492

    0

    0