லெஸ்பியன் உறவை பிரிக்க முயற்சி.. காவல் நிலைய பாத்ரூமில் செய்த செயலால் பகீர் : கெஞ்சிய தோழிகள்..!!
Author: Udayachandran RadhaKrishnan12 November 2022, 4:40 pm
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏர்கோல்பட்டியை சேர்ந்த 22 வயது பெண் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவர் இப்போது கோவை தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
அதேபோல் ஏரியூரை சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் பயோடெக் 3ம் வருடம் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேலத்தில் ஒரு தனியார் காலேஜில் படித்தபோது, ஏரியூரில் இருந்து ஒரே பஸ்ஸில் காலேஜுக்கு சென்று வந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் பிரியமுடியாத நிலைக்கு சென்றுவிட்டனர்.
இந்த விஷயம் இரு பெண்களின் வீட்டுக்கும் தெரிந்து, இவர்களை கண்டித்துள்ளனர். இதனால் 2 பெண்களும் மனவருத்தம் அடைந்தனர். எனவே 10 நாட்களுக்கு முன்பு 2 பேருமே வீட்டை விட்டு வெறியேறிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த, மாணவியின் பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் தந்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையுமே தேடி வந்தனர்.
அப்போதுதான், கோவையில் ஒரு வீடு எடுத்து இவர்கள் 2 பேரும் தங்கி வந்தது தெரியவந்தது.. அதற்கு பிறகு அவர்களை கண்டுபிடித்து, மீட்டு ஏரியூருக்கு மறுபடியும் அழைத்து வந்தனர்.
இரு வீட்டின் பெற்றோரையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். அந்த பெண்களுக்கு அறிவுரையும் சொல்லி பெற்றோர்களுடன் அனுப்பியும் வைத்தனர். இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு, மறுபடியும் கவுன்சிலிங் தருவதற்காக 2 பேரையும் பென்னாகரம் மகளிர் போலீஸார், ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். நீங்கள் இருவருமே வாழ வேண்டியவர்கள்.. உங்களுக்கென கணவன், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கை வரப்போகிறது.. இப்படிப்பட்ட உறவு நம்முடைய கலாச்சாரத்துக்கு சரிவராது என்று கவுன்சிலிங் தந்ததாக தெரிகிறது.
போலீசாரின் ஆலோசனைக்கு பிறகு, அந்த பெண் என்ஜினியர், மனம் வருந்தியதாக தெரிகிறது. சிறிது நேரத்தில், பாத்ரூம் செல்வதாக சொல்லிவிட்டு போயுள்ளார்.
பாத்ரூமுக்குள் நுழைந்துமே, ஏற்கனவே மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து, கழுத்து மற்றும் கைகளை அறுத்து கொண்டார். இதனால் ரத்தம் பீறிட்டு கொட்டி, வலி தாங்க முடியாமல் அலறினார். அந்த சத்தத்தை கேட்டு போலீசார் ஓடிச்சென்று பார்த்தனர்.
அப்போது பாத்ரூமுக்குள் பெண் என்ஜினீயர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பென்னாகரம் குற்றவியல் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவினா முன்னிலையில் அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.
பிறகு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு தோழி என்ன ஆனார் என்று தெரியவில்லை.. 2 பெண்களுக்குள் ஏற்பட்ட முறை தவறிய உறவால், பெண் என்ஜினீயர் தற்கொலைக்கு முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய தோழியை பார்க்க, இன்னொரு தோழி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது இருவரும் கட்டித்தழுவி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி கொண்டனர்.
பின்னர், அந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுவிட்டனர். உடனே, அந்த பெண் என்ஜினீயர் சிகிச்சையில் இருந்தபடியே புலம்ப ஆரம்பித்துவிட்டாராம்.. கடந்த 9 மாதங்களாக உயிருக்கு உயிராக நாங்கள் பழகினோம், என்னை மிரட்டி என்னுடைய தோழியை வலுக்கட்டாயமாக என்கிட்ட இருந்து பிரித்து விட்டனர் என்று கண்ணீர் வடித்து சொல்லி உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த அந்த மாணவியை பெற்றோருடன் செல்லுமாறு போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் அந்த மாணவியோ பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
கடந்த 2 வருடங்களாகவே நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாகவே மாறி விட்டோம். எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. எனக்கு ஒரு குடும்பம் என்றால் என்னுடைய என்ஜினியர் தோழி தான்.
வாழ்ந்தால் இனி அவருடன் தான் வாழ்வேன்.. பெற்றோருடன் போக மாட்டேன்.. அதையும் மீறி நீங்கள் கட்டாயப்படுத்தினால், காப்பகத்துக்கு வேண்டுமானால் போகிறேன் என்று சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன மகளிர் போலீசார், அந்த மாணவியை தருமபுரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.