பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஐஏஎஸ் அதிகாரியின் கார்… சமயபுரம் கோவிலில் பரபரப்பு : பக்தர்கள் கொந்தளிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2023, 12:58 pm
சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் திருவீதி விழா செல்லும் போது வழிமறித்து சென்ற திருச்சி மாநகராட்சி ஆணையரின் காரால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி – ஐ ஏ எஸ் அதிகாரியின் செயலால் பக்தர்கள் வேதனை.
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக தைப்பூச திருவிழா நேற்று 26 ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாளான இன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவர் அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து கடைவீதி மற்றும் தேரோடும் வீதி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலை சென்றபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவர் அம்மனுக்கு முன்னதாக சென்று கொண்டிருந்தனர்.
மேலும் வழி நெடுக பக்தர்கள் உற்சவர் அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது கடைவீதியில் எதிர்ப்புறம் காரில் இருந்த திருச்சி மாநகராட்சி ஆணையர் இரா. வைத்தியநாதன் திடீரென பக்தர்கள் கூட்டம் நடுவே காரை ஓட்டுநர் ஓட்டி சென்றது பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் உற்சவர் அம்மன் சிறிது நேரம் கடைவீதியிலேயே நின்றது. மேலும் ஐஏஎஸ் அதிகாரியை இதுபோன்ற செயலால் பொதுமக்களும் பக்தர்களும் மிகவும் வேதனை அடைந்தனர்.
மேலும் சமயபுரம் கடைவீதி பகுதியில் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்புகள் இருந்ததாலும் சமயபுரம் மாரியம்மன் உற்சவர் அம்மன் வரும்பொழுது எதிர் திசையில் வாகனங்களை நிப்பாட்டாமல் வந்ததால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.