‘யாருனு தெரியாது.. ஆனா கொன்னுட்டேன்..’ முதியவர் அளித்த பகீர் வாக்குமூலம்
Author: Hariharasudhan13 December 2024, 12:41 pm
சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த சடலம் தொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சென்னை: சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் (Mylapore Railway Station) உள்ள எக்ஸ்லேட்டர் படிக்கட்டில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து உள்ளார். இதனைப் பார்த்த பயணி ஒருவர், உடனடியாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் பரிசோதித்து பார்த்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், உயிரிழந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இருவர் ரயில் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதும், அப்போது அதில் ஒருவர் மற்றொருவரைப் பிடித்து தள்ளியதில் எக்ஸ்லேட்டரில் விழுந்து காயம் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல் மருத்துவமனையில் கட்டுக்கடங்கா தீ விபத்து.. 7பேர் பலி.. என்ன காரணம்?
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், உயிரிழந்த நபர் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் ஆரோக்கியராஜ் (40) என்பது தெரிய வந்துள்ளது. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகியதால், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக கோயில் வாசல் மற்றும் சாலை ஓரங்களில் தங்கி, கிடைக்கின்ற வேலையைச் செய்து, அதில் வரும் பணத்தை வைத்து சாப்பிட்டும், மது அருந்தியும் வந்துள்ளார். இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவரான சேட்டு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சேட்டுவிடம் மேற்கொண்ட விசாரணையில், மதுபோதையில் சேட்டுக்கும், ஆரோக்கியராஜ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அவரை சேட்டு மேலே இருந்து கீழே தள்ளிக் கொலை செய்ததும், கொல்லப்பட்டவர் யார் என்பது கூட தனக்கு தெரியாது எனவும் சேட்டு கூறியுள்ளார். பின்னர், சேட்டை கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.