அப்பாவை இப்படியா சொல்வது? ஸ்டாலினுக்கு எதிராக கொந்தளித்த மகன்!

Author: Hariharasudhan
25 November 2024, 3:58 pm

ராமதாஸ் குறித்து பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னை: இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் என்ன கேள்வி எழுப்பி இருந்தார் என்றால், ‘கௌதம் அதானியை ஏன் உங்கள் இல்லத்தில் ரகசியமாக சந்தித்தீர்கள் என்று கேள்வி கேட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது?

எதிர்கட்சிகள் கேள்வி கேட்பது எங்களுடைய உரிமை. அதற்கு பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது கடமை. அதை விட்டுவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், ராமதாஸை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி உள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ராமதாஸ் இல்லை என்றால், 2006இல் கருணாநிதி முதலமைச்சராக இருந்திருக்க முடியாது.

மைனாரிட்டி அரசு என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து விமர்சனம் செய்த நிலையில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கருணாநிதிக்கு முழு ஆதரவு கொடுத்தார் ராமதாஸ். அதனால் தான் ஐந்தாண்டுகள் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக்கினார். ராமதாஸ் இல்லையென்றால் கருணாநிதியை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்திருக்க மாட்டார்கள். அங்கு அவருக்கு மணிமண்டபமும் வந்திருக்காது.

நாங்கள் பதிவு செய்த வழக்கை ராமதாஸால் தான் திரும்பப் பெற்றோம். அதனால்தான் நீதிபதி கருணாநிதியை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என தீர்ப்பு வழங்கினார். ஆறு இட ஒதுக்கீடுகளைப் பெற்றுத் தந்த சமூக சீர்திருத்தவாதி தான் ராமதாஸ். அவரைப் பார்த்து வேலை இல்லை என்று சொல்வது பணம், கருணாநிதியிடம் ஸ்டாலின் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை.

அறிக்கை என்பது எங்களுடைய யோசனைகள். அறிக்கை விடுவது எங்களுடைய கடமை, எங்களுடைய உரிமை, அதனால் அறிக்கை விடுகிறோம். தமிழ்நாடு மக்கள் நலம் பெற வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் தான் அறிக்கை விடுகின்றோம். அந்த நல்ல யோசனைகளைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 75 தொகுதிக்கு 1 மாநிலமா? அர்ஜுன் சம்பத் கோரும் தமிழகம்

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலினிடம், ‘அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வரைச் சந்தித்ததாக பா.மக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை” என ஸ்டாலின் பதிலளித்து இருந்தார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?