கடலூரும் டெல்டா மாவட்டம் தான் என்பது மறந்து போயிடுச்சா..? இப்படியே போனால் தமிழகம் திவாலாகிவிடும் ; எச்சரிக்கும் அன்புமணி..!!
Author: Babu Lakshmanan29 July 2023, 7:00 pm
நெய்வேலியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக அரசின் கவுண்டவுனை துவங்க நினைக்கிறார்களா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் பாமக தொடர்ந்து போராடி வருகிறது கடந்த 2000 ஆவது ஆண்டில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆகியும் 13 நிறுவனங்கள் மட்டுமே அங்கு செயல்படுகிறது. 600 நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னமும் சிறப்பு பொருளாதார மண்டலம் வளர்ச்சி பெறவில்லை. அதற்கான முயற்சியையும், ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தும் செய்யவில்லை.
நெய்வேலியில் நேற்று நடத்தப்பட்ட போராட்டம் விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம். அந்த போராட்டத்தில் காவல்துறையினர் ஏவி விடப்பட்டு தொண்டர்களின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. பதட்டமான சூழலை உருவாக்கியது காவல்துறை தான். திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும் சொல்லிக் கொள்வது, விவசாயிகள் விரோத போக்கை திராவிட முன்னேற்ற கழக அரசு கடைபிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கிறேன்.
மேலும் தொடர்ந்து, பேசிய அவர், என்எல்சியில் இருந்து உங்கள் கவுண்டவுன் தொடங்காதீங்க என்றார். இது என்எல்சிக்கு எதிரான போராட்டமும், அந்த பகுதி மக்களின் போராட்டமும் அல்ல, தமிழ் சமூகத்திற்கான போராட்டம். 2000 போலீசாரை வைத்துக்கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தியது கோழைத்தனம். நிலத்தை அழித்தால் சோறு கிடைக்காது என நீதிபதி சொன்ன பிறகும், இன்று மீண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு எதிரான போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி அறிவிக்கும்.
தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது என அமைச்சர் கூறியுள்ள நிலையில், நெய்வேலியில் கிடைக்கும் சொற்ப மின்சாரத்திற்காக விவசாய நிலத்தை அழிக்க வேண்டாம். குறுகிய கால அரசியல் லாபத்திற்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. தங்கம் தென்னரசு பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு என்எல்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். என்எல்சிக்கு எதிராக தமிழக தலைமைச் செயலகத்திற்கு அழையா விருந்தாளியாக சென்று தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்தேன். இதனையா குறுகிய அரசியல் என்று கூறுகிறார்கள்.
என்எல்சியில் தமிழர்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்படவில்லை. கூட்டுவது, பெருக்குவது போன்ற பணிகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. 3000 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னூரில் சிப்காட் அமைப்பதற்கு அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு சிப்காட் அமைந்தால் வேலை வாய்ப்பு கிடைக்காதா..? அன்னூர் வேண்டாம்.. என்எல்சி வேண்டுமா?, என கேள்வி எழுப்பினார்
தஞ்சை மாவட்டம் டெல்டா மாவட்டங்கள் என முதலமைச்சர் நினைக்கிறாரா..? கடலூரும் டெல்டா மாவட்டம்தான். தன்னை டெல்டா காரன் என்று சொல்லும் முதலமைச்சருக்கு கடலூரில் நிலம் எடுப்பது குறித்த உணர்வு இல்லையா?
அதிமுக ஆட்சியில் அவர்கள் அதிகமாக கடன் வாங்குகிறார்கள். என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக 51 ஆயிரம் கோடி ரூபாய் பழைய கடன்களை அடைப்பதற்காகவும், அதற்கு வட்டி கட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மொத்த கடன் 12.53 லட்சம் கோடியாக உள்ளது. 4.5 லட்சம் கோடி பொது கடனாகவும், 7.25 லட்சம் கோடி நிர்வாக கடனாகவும் உள்ளது இதே நிலை தொடர்ந்தால் தமிழக அரசு திவால் ஆகிவிடும். நாங்கள் டெல்லியில் என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம். அண்ணாமலையின் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள், என்று தெரிவித்தார். பேட்டியின் போது முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0
0