ஒரு வருஷத்துல ஆன்லைன் ரம்மியால் 27 பேர் தற்கொலை… தடை செய்ய தயக்கம் ஏன்..? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி…
Author: Babu Lakshmanan28 July 2022, 1:33 pm
ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற விளம்பரமும், ஆசையையும், அடுத்தடுத்து மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரைக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதிலும், ஆன்லைன் ரம்மியால் ரூ. 20 லட்சத்தை இழந்த கோவை போலீஸ்காரர் காளிமுத்து கடந்த 15-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, மனித உயிர்கொல்லியான ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், இதற்காக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ. 15 லட்சத்தை இழந்த பிரபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் தமிழகத்தை மீளா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு வருடத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையிலும், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆன்லைன் சூதாட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட கேரள பரிசுச்சீட்டில் ரூ.18 லட்சத்தை இழந்த தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முத்தானூரை சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.
ஏற்கனவே பெரும் பணத்தை இழந்த பிரபு, தமது வீட்டை விற்க முன்பணம் பெற்று அதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதற்கு பிரபுவின் கதை தான் வேதனையான எடுத்துக்காட்டு
ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என அரசு அறிவித்த பிறகு நிகழ்ந்த 4ஆவது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு இன்னும் தயங்குவது ஏன்?
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் ஓர் உயிர் கூட பறிபோகக் கூடாது. வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.