3 வருடமாக சமையல் அறையில் இயங்கும் அங்கன்வாடி பள்ளி… கண்டுகொள்ளாத கல்வித்துறை!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2023, 8:52 pm

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட காமாட்சி அம்மன் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு ஓடு போட்ட கட்டிடத்தில் இருந்தது.

இந்த கட்டடம் பழைய கட்டிடம் என்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது. இதற்கு மாற்று இடமாக தொடக்கப்பள்ளியில் அங்கன்வாடி என ஒதுக்கப்பட்ட ஒரு சிறிய சமையல் அறையில் இயங்கி வருகிறது.


அங்கன்வாடி மையத்தில் ஆபத்தான முறையில் சமையலறை மற்றும் கல்வி கற்றல் என ஓரே அறையில் கடந்த 3 வருடங்களாக குழந்தைகள் பயின்று வருகின்றனர். அரசு தொடக்கப் பள்ளியில் ஆபத்தான வகையில் உள்ள சமையல் கூடத்திலேயே அங்கன்வாடி மையம் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தருமபுரி நகராட்சிக்குட்பட்ட காமாட்சி அம்மன் தெருவில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்குள்ள மாணவர்கள் கல்வி பயில பாலர் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நகர்ப்புற நூலகம் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வரும் நிலையில், வகுப்பறை இல்லாததால் தற்பொழுது 20 குழந்தைகள் மட்டுமே வருவதாகவும் அதிலும் குறிப்பாக மதிய உணவு வழங்கும் நேரத்தில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து உணவை வாங்கி செல்கின்றனர்.

மீதம் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த சமையல் அறையிலேயே ஒரு ஓரத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர். அதே சமயம் அதே இடத்தில் பொருட்கள் இருப்பு மற்றும் சமையலறையும் செயல்பட்டு வருகிறது.

அவர்களுக்கு தேவையான உணவு தயாரிப்பு செய்ய ஊழியர்கள் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் அருகிலேயே குழந்தைகள் அமர்ந்து விளையாடிக் கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள் அடிக்கடி எழுந்து சென்று வரும் நிலையில், தன்னை அறியாமல் கியாஸ் சிலிண்டரின் பைப் லைன் பகுதி கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதின் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர்.

கியாஸ் சிலிண்டர்களை சாதாரண பெரியவர்களே கையாள்வது கடினமான சூழ்நிலையில், எரிவாயு சிலிண்டர் பகுதியிலே கல்வி கற்க வந்த சிறுவர்கள் அமர்ந்துள்ளனர். சமையல் செய்யும் போது குழந்தைகளை பள்ளி வராண்டாவில் உட்கார வைத்து விளையாட வைக்கின்றனர். குழந்தைகள் அனைவரும் வெயில், மழை என்று பாராமல் உட்கார வைத்துள்ளனர்.

இடிக்கப்பட்ட அங்கன்வாடி பள்ளி குறித்து பகுதி மக்கள் நகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பலமுறை புகார் மனு வழங்கியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும் பள்ளிகல்வித்துறை மெத்தனமாக உள்ளது எனவும் அப்பகுதி பொதுமக்கள் கூறினர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு காமாட்சி அம்மன் தெருவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட அனுமதி அளிக்க வேண்டும். அதுவரை அருகிலுள்ள வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 421

    0

    0